Skip to main content

நீதிபதி கர்ணன் அரசியல் கட்சியைத் தொடங்கினார்!

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

நீதிபதிகளின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பு கிளப்பிய நீதிபதி கர்ணன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கிறார். 

 

Karnan

 

சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியவர் கர்ணன். இவர் மூத்த நீதிபதிகள் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவுக்குக் கட்டுப்பட மறுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்தித்தார். இதையடுத்து, ஆறுமாத காலம் சிறைத்தண்டனை அனுபவித்த நீதிபதி கர்ணன், ஐந்து மாதங்களுக்கு முன்னர் விடுதலையானார். 

 

இந்நிலையில், நீதிபதி கர்ணன் தனது அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஊழலுக்கு எதிரான மாற்றுக் கட்சி (Anti - Corruption Dynamic Party) என்ற அக்கட்சியின் பெயரையும் அவர் அறிவித்தார். நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் ஊழலை ஒழிப்பதே தனது கட்சியின் கொள்கை என அவர் தெரிவித்திருக்கிறார். 

 

மேலும், அடுத்தாண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 543 தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக கூறியுள்ள அவர், சமூகத்தில் அனைத்து பாகுபாடுகளையும் சந்திக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது அத்தியாவசியம் என குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், தனது கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றால் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பிரதமராகும் வாய்ப்பை சுழற்சிமுறையில் வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  இருப்பினும், தனது கட்சிக்கான அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் இன்னமும் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்