Skip to main content

“இரட்டை இலைக்கும், மாம்பழத்திற்கும் ஓட்டு அளித்தால், அது பாஜகவிற்கு ஓட்டளித்ததாக அர்த்தம்...” - தொல். திருமாவளவன்

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

If you vote for admk and pmk, it means you voted for BJP

 

“தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து மோடியை எதிர்த்து வந்த ஜெயலலிதாவிற்கு துரோகம் இழைக்கும் விதமாக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்” என்கிறார் தொல். திருமாவளவன்.

 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ஆளுர் ஷாநவாஸ்க்கு பானை சின்னத்தில் ஓட்டு கேட்டு, நாகையில் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதற்கு முன்னதாக திருமருகல் பகுதியில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸை ஆதரித்தும், கீழ்வேளூர் தொகுதியில் நாகை மாலியை ஆதரித்தும் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து நாகை அவுரி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் கரு.பழனியப்பன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 

 

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், “தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். எதிரணியில் இருப்பவர்கள் வழக்கமான அதிமுகவினர் இல்லை, பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியை தொடர்ந்து எதிர்த்து வந்தார். ஆனால் தற்போது ஆட்சி நடத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் பாஜகவை ஆதரித்து சிவப்பு கம்பலம் விரித்து வரவேற்கின்றனர். இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும், அதிமுக தொண்டர்களுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகம் இல்லையா? அதிமுக என்பது அதிமுகவாக இல்லை, அது பாஜகவாக மாறிவிட்டது. 

 

அதேபோலதான், பாட்டாளி மக்கள் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியின் பினாமி கட்சியாக மாறிவிட்டது. தமிழகத்தில் பாஜகவிற்கு தாமரை சின்னம் மட்டுமல்ல, இரட்டை இலை சின்னம், மாம்பழம் சின்னம் உள்ளிட்ட 3 சின்னங்கள் உள்ளன. இந்த தேர்தலில் இரட்டை இலைக்கும், மாம்பழத்திற்கும் ஓட்டு அளித்தால் அது பாஜகவிற்கு ஓட்டளித்ததாக அர்த்தம். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்” என தனக்கே உரிய பாணியில் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்