Skip to main content

“எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டவன் நான்” இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் திருநாவுக்கரசர்

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

17-வது மக்களவை தேர்தல் 18-ம் தேதி நடக்க உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடு பறந்தது. ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு ஊரில் தங்கள் பிரச்சாரத்தை முடித்தார்கள். அந்தவகையில் திருச்சி தொகுதி தி.மு.க காங்கிரஸ்  கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் தனது இறுதிப் பிரச்சாரத்தை முடித்தார். அதன்பிறகு, அண்ணா சிலை அருகே தனது இறுதி பிரச்சாரத்தின்போது அவர், “கடந்த 20 நாட்களாக  கூட்டணி கட்சியினர் ஒவ்வொருவரும் வேட்பாளராகக் கருதி சங்கடமின்றி, மனப்பூர்வமாக பணியாற்றினார்கள். அதுமட்டுமின்றி வாக்குப் பதிவு முடிந்து, வாக்குப்பெட்டியை அனுப்பி வைக்கும் போதும், மே 23-ம் தேதி நாம் வெற்றி பெற்றோம் என்று அறிவிக்கும் வரையிலும் செயல்படும் கூட்டணி கட்சியை சேர்ந்த அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

thirunavukarasar


இத்தனை ஆண்டுகள் என்னை தாய்போல் மடியில் வைத்து தாங்கியவர்கள் புதுக்கோட்டை மக்கள்.  பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் கட்சி எல்லையைக் கடந்து சாதி, மதங்களைக் கடந்து உங்களையே சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். திருச்சி தொகுதியில் போட்டியிடுவோரில் 1977-ம் ஆண்டு நான் திருமணம் ஆகாத 27 வயது இளைஞராக இருந்தபோது எம்ஜிஆரால் அடையாளம்  காணப்பட்டு துணை சபாநாயகர் பதவியும் வகித்தவன். அதுவரை அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் கோட்டை. ஆனால் அதில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அந்த ஒரே தொகுதியில் 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானேன். அதற்கு பிறகு 1999-ல் புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் கலைஞர் துணையால் மோதிரம் சின்னத்தில் நிறுத்தி வெற்றி பெற்ற நான், பிறகு ராஜசபாவிலும் எம்.பியாக பணியாற்றி அமைச்சராக இருந்தவன். அகில இந்திய தலைவர்களோடு பழகிய நான் போட்டியிடுகிறேன். 

     
மற்றொரு பக்கம் தர்மபுரியில் இருந்து வந்து போட்டியிடும் தேமுதிக வேட்பாளர். வெற்றி பெற்றால் என்ன சாதிக்கப்போகிறார்?. அவர் மத்தியில் அமைச்சராகப்போகிறாரா? அல்லது விஜயகாந்த் பிரதமராகபோகிறாரா?. எதுவும் நடக்கப்போவதில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைத்திருக்கவே மாட்டார். ஆனால், ஒ.பி.எஸ். ஈ.பி.எஸ். கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.
 

    
இந்த தொகுதியில் இரட்டை இலையும் நிற்கவில்லை, அ.தி.மு.க வும் இல்லை. அதனால்தான் சொல்கிறேன். எம்.ஜி.ஆரால் அடையாளங்காட்டப்பட்ட எனக்கு வாக்களித்த வெற்றி பெறச் செய்யுங்கள். புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை இணைந்து மலைக்கோட்டை தொகுதியில் நிற்கும் என்னை உங்கள் இதய கோட்டையில் வைத்து செங்கோட்டைக்கு அனுப்பினால் ஸ்டாலினை புனித சார்ஜ் கோட்டைக்கும் ராகுலை செங்கோட்டைக்கும் தலைமை ஏற்க வைக்க முடியும். அதனால் உங்கள் இதய கோட்டையில் எனக்கு இடம் கொடுங்கள்.

      
அமமுக ஒரு அரசியல் கட்சியே இல்லை. அந்தக் கட்சியினர் திருச்சி தொகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறப்போவதில்லை. நான் இத்தனை ஆண்டுகளில் நல்லது செய்திருப்பேனே தவிர, எவருக்கும் துரோகம் செய்ததில்லை. எனவே, என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.

   
புதுக்கோட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மேலும், புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி இல்லாமல் போனது வருத்தத்துக்கு உரியது. தொகுதி மறு சீரமைப்பின்போது மீண்டும் புதுக்கோட்டை தொகுதி உருவாக்கப்படும்” என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்