பட்டியலின அணியின் தலைவருக்கு வாங்கித் தரப்படும் புது காரை மீண்டும் உடைத்தால், அவருக்கு ஹெலிகாப்டர் கொடுக்கப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் பட்டியலின அணியின் தலைவராக செயல்படுபவர் தடா பெரியசாமி. இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திருமாந்துறையில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது காரினை மர்மநபர்கள் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. காரின் டயர்கள் கத்தியால் குத்திக் கிழிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருந்தன. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், ராணுவ வீரர் ஒருவர் கிருஷ்ணகிரி பகுதியில் திமுக கவுன்சிலரின் உறவினர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் தமிழக பாஜக சார்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. கோவையில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “பாஜகவின் பட்டியலின அணியின் தலைவராக இருக்கக் கூடிய தடா பெரியசாமியின் வீட்டில் மூன்று நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடந்திருக்கிறது. நான் தாக்குதல் நடந்த இல்லத்திற்கு செல்லவில்லை. செல்லப்போவதும் கிடையாது. எங்களுடைய பட்டியலின அணியின் தலைவரின் வீட்டை அடித்து விட்டீர்கள். காரை உடைத்து விட்டீர்கள். அதற்காக வருத்தப்படப் போவதும் கிடையாது.
அவருக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் சொன்னேன். உங்களுக்கு என்ன சேதம் அடைந்திருக்கிறதோ; அந்த கார் என்ன சேதம் அடைந்து இருக்கிறதோ, அதை இந்தக் கட்சி, கட்சியின் நிதியிலிருந்து சரி செய்து கொடுக்கும் என்று கூறினேன். காரை சரி செய்வதற்கான முழுச்செலவையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சரிசெய்யப்பட்ட காரை மீண்டும் உடைத்தார்கள் என்றால் உங்களுக்கு பாஜக சார்பில் புது கார் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கப்பட்ட புது காரையும் உடைத்தார்கள் என்றால் ஹெலிகாப்டர் கொடுக்கப்படும். இதை நான் மேடையில் தலைவராக சொல்கின்றேன். இம்மாதிரியான செயல்களை எல்லாம் பார்த்து பயப்படுகிற கட்சி எங்கள் கட்சி அல்ல” எனக் கூறியுள்ளார்.