Skip to main content

“எங்கள் மீது கல்லெறிந்தால் காணாமல் போய்விடுவீர்கள்” - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

ADMK EX MINISTER TALK ABOUT BJP AND ANNAMALAI

 

பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கடந்த சில தினங்களாக பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதற்கு கூட்டணி தர்மத்தை மீறி பாஜகவினரை அதிமுக தங்களது கட்சியில் இணைத்துக்கொள்வதாக பாஜக குற்றம் சாட்டியது. இதற்கு ஒருபடி மேலே சென்ற அண்ணாமலை, ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக எதிர்வினை இருக்கும் என அதிமுகவை எச்சரிக்கும் தொனியில் பேசியிருந்தார். 

 

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “எனது நண்பர் வைத்திலிங்கம் தரம் தாழ்ந்து பேசுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. கர்ணன் படத்தில் வரும் பாடல், ‘சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயே கர்ணா’ என்று வருவதை போன்று ஓ.பி.எஸ்ஸுடன் சேர்ந்துவிட்டார். அதை உணர்ந்து வைத்திலிங்கம் எடப்பாடி அணிக்கு வந்தால் நன்றாக இருக்கும். அதிமுக கண்ணாடி அல்ல, உடைவதற்கு. அது சமுத்திரம்., அதில் கல்லெறிந்தால் காணாமல் போய்விடுவீர்கள். அதிமுக அசுரவேகத்தில் வளர்வதால் அனைத்து கட்சியினரும் சேர்கின்றனர். எடப்பாடி பழனிசாமி படத்தை பாஜகவினர் எரிக்கிறீர்கள். எங்கள் கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கின்றனர். அவர்கள் கிளர்ந்து எழுந்தால் உங்களால் ஈடுகட்ட முடியாது. அதனால் பாஜகவினர் அப்படியெல்லாம் செய்யக்கூடாது. இது கண்டனத்திற்குரிய விஷயம். அவர்களைத் தண்டித்து கட்சியில் இருந்து பாஜக தலைமை நீக்க வேண்டும். 

 

அண்ணாமலை எப்படி தலைவரானார் என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், ஜெயலலிதா மாதிரி ஒரு தலைவராகச் செயல்படுகிறேன் என்று கூறாதீர்கள். அப்படிக் கூறுவதற்கு உலகத்திலேயே யாருக்கும் தகுதியில்லை. செஞ்சி கோட்டை ஏறுகிறவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது. இதுதான் சொல்லுவேன். புரிந்துகொண்டால் புரிந்துகொள்ளுங்கள். பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என தலைமை கூறிவிட்டது. அதனால் சில பாஜகவினர் செய்வதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்