Skip to main content

அரசின் மோதல் போக்கால் சிக்கலில் மாட்டும் கலெக்டர்கள்; விளக்கும் ஆளுநர் தமிழிசை

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

Governor Tamilisai on conflict trend of Telangana government

 

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தெலுங்கானா ஆளுநரை முன்வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளை அம்மாநில அரசு பெரும்பாலும் தவிர்த்து வருகிறது.  

 

இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளைப் போலவே குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை இந்தாண்டும் நடத்த இயலாது என ஆளுநர் மாளிகைக்கு தெரிவித்துவிட்டது. அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் அணிவகுப்பை ரத்து செய்யக்கூடாது என்றும் நிச்சயம் குடியரசு தின அணிவகுப்பை நடத்த வேண்டும் என நேற்று உத்தரவிட்டு இருந்தது. இதனை அடுத்து ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழாவினை நடத்திக் கொள்ளும்படி ஆளுநரை கேட்டுக்கொண்ட அரசு, காவல்துறை அணிவகுப்பிற்கும் ஏற்பாடு செய்தது. தொடர்ந்து குடியரசு தினவிழாவினை ஒட்டி வழங்கப்படும் விருதுகளை ஆளுநர் தமிழிசை வழங்கினார்.

 

இந்நிலையில் புதுச்சேரியில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர் தமிழிசை, “அனைத்து அதிகாரமும் ஆளுநருக்கு இருக்கிறது. அதிகாரத்தை பயன்படுத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்துகிறார் எனச் சொல்லுகிறீர்கள். இல்லையென்றால் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என சொல்லுகிறீர்கள். தெலுங்கானா முதல்வர் மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என முடிவு செய்து ஆளுநரையும் எதிர்க்கிறார். இது எனக்கு புளித்துவிட்டது. மாதம் மாதம் மத்திய அரசுக்கு நாங்கள் ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும். அந்த அறிக்கையில் நான் அனைத்தையும் குறிப்பிட்டு அனுப்பிவிடுவேன். எந்த கலெக்டர் என்னை வரவேற்கவில்லை என அனைத்தையும் எழுதி விடுவேன். 

 

அவர்கள் மேல் தனி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதை நானே எடுக்கலாம். அவர்களது வருங்காலம் பாதிக்கப்படும் என்பதால் அதை தவிர்க்கிறேன். ஏனென்றால் அவர்களாக வராமல் இல்லை. அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்படுவதால் வராமல் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் வராமல் இருக்கிறார்கள். இன்னொருவரின் வாழ்க்கையினை கெடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்