Skip to main content

பேரம் பேசி இப்போது நடுத்தெருவில் நிற்கிற கேவலமான நிலையில் இருக்கிறது... -எவிடென்ஸ் கதிர்

Published on 09/03/2019 | Edited on 09/03/2019


மார்ச் 7 ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் சென்னையில் மாநாடு நடத்தப்பட்டது. அதில் பிரதமர் மோடியும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். தேமுதிக-அதமுக கூட்டணி உறுதிசெய்யப்படாத நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படம் விழா அரங்கில் வைக்கப்பட்டு சர்சைகளுக்குப் பிறகு அது அகற்றப்பட்டது. அதே நேரத்தில் தேமுதிக கட்சி திமுகவுடனும் கூட்டணிக்காக பேசியது என தகவல்கள் வெளியாகின. சர்சைக்குறிய தொடர் அரசியல் சூழலில் எவிடென்ஸ் கதிர் அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது,

 

evidance kadhir


மோடியும், ராமதாஸூம் மேடையில் கைகோர்த்த காட்சி, மதவாதமும், சாதியவாதமும் இணைந்திருப்பதை உணர்த்தியது. இந்தியாவில் எல்லோருக்கும் மத சுதந்திரம் இருக்கிறது, அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், முதல்வர் பழனிசாமி, மோடி அவர்களுக்கு விநாயகர் சிலையை பரிசாகக் கொடுக்கிறார். தமிழக முதல்வராக இருக்கக்கூடிய அவர், தமிழன்னை சிலையை கொடுத்திருக்கலாம். அல்லாமல் ஏன் அவர் விநாயகர் சிலைக் கொடுத்தார் எனத் தெரியவில்லை. மோடியும் செல்லும் இடம்மெல்லாம் பகவத் கீதையை பரிசாகக் கொடுக்கிறார். கட்சிக் கூட்டமாக இருந்தாலும் தமிழக முதலமைச்சர் இதுபோன்ற செய்கை செய்வது ஏற்புடையது இல்லை. இன்றைக்கு இருக்கிற எல்லோரும் பெரிய சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்கள், குறிப்பாக தேமுதிக கட்சி அதிமுகவில் ஒரு பக்கமும், திமுகவில் ஒருபக்கமும் பேரம் பேசி இப்போது நடுத்தெருவில் நிற்கிற கேவலமான நிலையில் இருக்கிறது. பிஜேபியும், பாமகவும் எவ்வளவு மோசமான கட்சிகள் என்பதை சொல்லவேண்டியதில்லை.
 

இந்தச் சூழலில் வேறுவழியில்லாமல், நாம் எதிர்ப்பார்க்கும் ஜனநாயகம் இருக்கிற காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகளின் கூட்டணியை ஆதரிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், அண்ணன் திருமாவளவன் அவர்களை பாராட்டவேண்டும். அவர் ஆரம்பத்திலிருந்தே சனாதான எதிர்ப்புக் கொள்கையில் உறுதியாக இருந்துவருகிறார், அவர் அந்த பிடியை விடவேயில்லை. ஆனால், சில தலித் கட்சிகள் இந்த மதவாத, சாதியவாத கட்சிகளோடு இணைந்திருப்பது அம்பேத்கருக்கு செய்கிற துரோகம். இது வெகுஜன, ஜனநாயக அரசியலை மட்டுமில்லாமல் தலித் அரசியலையும் குழிதோண்டிப் புதைக்கிற செயல். மற்ற கட்சிகளைவிட சில உதிரி தலித் கட்சிகள் இந்த நிலைபாட்டை எடுத்திருப்பது அபாயகரமானதும் அறுவெறுக்கத்தக்கதும் மட்டுமின்றி கண்டிக்கத்தக்கதும் கூட.  அந்தவகையில், ஆதி தமிழர் பேரவையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மதவாத சக்திகளுக்கெதிரான சரியான நிலைபாட்டை எடுத்துள்ளனர்.
 

அரசியல் கருத்துக்களில் மாறுபாடுகள் இருந்தாலும் மைய அரசு என வரும்போது எல்லோருக்கும் பொதுவான எதிரி பி.ஜே.பி தான். ஜெயலலிதா, அடல் பிகாரி வாஜ்பாய்க்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தபொது அதைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டவர் ராமதாஸ் என அண்மையில் வைகோ கூறினார். அதுதான் ராமதாஸின் நிலை. அவர் அந்த கட்சிகளுக்கு நல்ல அடிமையாக இருப்பார். சமூக நீதி வலிமையாக இருக்கிற தமிழ்நாட்டில் இப்படியொரு கேவலமான போக்கு நடந்துவருகிறது. இவர்களை இந்த தேர்தலின் மூலம் வேரோடு பிடிங்கி எறிய வேண்டியக் கடமை ஒவ்வொரு இளைஞருக்கும் உள்ளது. வேறு வழியில்லாமல், நமக்குள் இருக்கிற வேறுபாடுகளை மறந்து, மிகப் பெரிய தலித் அரசியலை முன்னெடுக்கிற திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளின் கூட்டணியை ஏற்கவேண்டியுள்ளது.




 

சார்ந்த செய்திகள்