Skip to main content

முதலமைச்சர் சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளோடும் ஆலோசிக்க வேண்டும்: ஈஸ்வரன்

Published on 25/04/2020 | Edited on 25/04/2020

கார்ப்பரேட் முதலாளிகளோடு ஆலோசித்த முதலமைச்சர் சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகளோடும் ஆலோசிக்க வேண்டும் என்றும், 50 லட்சம் தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் தொழில்துறையினரோடு ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க போகிறார் என்ற செய்தி சிறு மற்றும் நடுத்தர தொழிலை சார்ந்தவர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில் TVS கம்பெனி முதலாளியும், இந்தியா சிமெண்ட்ஸ் கம்பெனி முதலாளியும், ராம்கோ சிமெண்ட்ஸ் முதலாளியும், முருகப்பா குழுமத்தின் முதலாளியும் மேலும் சில கார்ப்ரேட் முதலாளிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
  E.R.Eswaran


 

நடக்க வேண்டியதுதான். மகிழ்ச்சி. ஆனால் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்ற அரசாக மத்திய அரசின் பாணியை தமிழகம் பின்பற்றுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புவதும் உண்மைதான்.  50 லட்சம் தொழிலாளர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்ற சிறு மற்றும் நடுத்தர தொழில் சார்ந்த நல அமைப்புகளின் தலைவர்களையும் சந்திக்க வேண்டுமென்று விரும்புகிறோம். தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பது சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் அதைச் சார்ந்திருக்கின்ற 50 லட்சம் தொழிலாளர்களும். மே 3-ஆம் தேதி ஊரடங்கு முடிந்து தொழிற்சாலைகள் திறந்தால் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு தேவையான ஆர்டர்கள் இருக்குமா என்ற கவலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
 

 nakkheeran app



உற்பத்திக்கு தேவையான மூல பொருட்களுக்கான நிலுவையில் இருக்கின்ற கடனை செலுத்தாமல் மூலப்பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகத்திலேயே ஊரடங்கு காலம் முழுவதும் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடைசியாக முடியும் தருவாயில் இருந்த உற்பத்தி பொருட்களை கூட முடித்து அனுப்ப முடியாத வேதனையில் இருக்கிறார்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உற்பத்தி செய்து அனுப்பியதற்குரிய வருவாயை, வாங்கியவர்கள் எப்போது தருவார்கள் என்று தெரியாமல் நிலைதடுமாறி இருக்கிறார்கள். வருடக்கணக்கில் தங்களை நம்பியிருந்த தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுவது என்ற குழப்பத்திலும் இருக்கிறார்கள்.

தொழிற்சாலைகள் கொஞ்சம் கூட இயங்காத ஊரடங்கு காலத்திற்கும் மின்சார வாரியம் மின்கட்டணத்தை தள்ளுபடி செய்யாமல் வசூலிக்கின்ற அறிவிப்புகளை குறுஞ்செய்திகளாக தொழிற்சாலைகளுக்கு கொடுத்துக் கொண்டிருப்பதும் வேதனை. ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சரும் வங்கிகளுக்கு போட்ட உத்தரவு எல்லாம் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வங்கிகள் தங்களுக்கு வர வேண்டிய வட்டியையும் மற்ற வரவுகளையும் வங்கிக் கணக்கில் இருந்து தாமாகவே எடுத்துக் கொண்டார்கள் என்பதும் உண்மை. வேலை இழந்து இருக்கின்ற 50 லட்சம் தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் வேலை இழப்பது உறுதி என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் தங்களை அழைத்து தங்களுடைய தேவைகள் குறித்து கேட்கமாட்டாரா என்ற ஆதங்கம் சிறு மற்றும் நடுத்தர தொழிலை சார்ந்தவர்களிடத்தில் மேலோங்கியிருக்கிறது.  தங்களையும் அழைத்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்கள் கார்ப்ரேட் முதலாளிகளை மட்டும் முதலமைச்சர் கலந்து ஆலோசித்தார் என்ற செய்தி அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் 50 லட்சம் குடும்பங்களை வாழ வைக்கின்ற சிறு மற்றும் நடுத்தர தொழில்களை சார்ந்த அனைத்து சங்கங்களுடைய  தலைவர்களையும் தமிழக முதலமைச்சர் காணொலி  மூலமாக கலந்து பேச வேண்டும். ஊரடங்கை தளர்த்த திட்டமிடுவதற்கு இது மிக முக்கியம் என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்