Skip to main content

நெருங்கிய விஜிலன்ஸ்... நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி..! பரபரப்பு பின்னணி! 

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

Close vigilance .. Edappadi Palanisamy in crisis!

 

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சக்தி வாய்ந்த முகமாகத் திகழ்ந்த மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 36 இடங்களில் விஜிலன்ஸ் போலீசார் சோதனை நடத்தினர். 

 

சென்னையில் உள்ள இளங்கோவனுக்கு நெருக்கமான நண்பர்கள் வீடுகளிலும் விஜிலன்ஸ் சோதனை நடத்தியிருக்கிறது. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் இளங்கோவன் 25 கோடி ரூபாய்க்கு இந்திய பங்குச்சந்தைகளிலும், 45 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டுப் பங்கு வர்த்தகத்திலும் முதலீடு செய்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். 5.50 லட்சம் ரூபாய்க்கு அந்நிய செலாவணி வர்த்தகம் நடந்திருப்பதாகவும் சொல்கிறது விஜிலன்ஸ். சரியான சோர்ஸ் காட்டாத பட்சத்தில் இளங்கோவன் மீது ஃபெமா சட்டத்தின் கீழும் வழக்குப் பாயக்கூடும் என்கிறார்கள்.

 

இளங்கோவன் குறித்து பேசிய சில ர.ர.க்கள், ''ஆத்தூர் இளங்கோவன் சிறுவயதில் தந்தையை இழந்தவர். தாயார், வேகவைத்த பலாக்கொட்டை வியாபாரம் செய்தார். இளங்கோவனை சித்தப்பாதான் வளர்த்துள்ளார். பூர்வீக சொத்து என்பது 1.50 ஏக்கர் தரிசு நிலம். பெத்தநாயக்கன்பாளையம் அரசுப் பள்ளியில்தான் படித்தார். சேலத்தில் பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இளங்கோவனின் மாமா கருப்பையா நடத்திவந்த டீக்கடையில் வேலை செய்தார். டீக்கடையும் இந்திய அரசியலும் சென்ட்டிமெண்ட்டானவை.

 

எம்ஜிஆர் ஆட்சியின்போது, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவராக இருந்த அன்பரசு என்பவருக்கு உதவியாளரானபோது, அரசியல் தொடர்பு ஏற்பட்டது. உள்ளூரில் சில அரசு ஒப்பந்தப் பணிகளை இளங்கோவன் பெயரில் எடுத்து செய்துவந்தார் அன்பரசு. பின்னர், மா.செ.வான டி.எம். செல்வகணபதி மூலம், 2011 உள்ளாட்சித் தேர்தலில் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்யாண கிரி வார்டில் எப்படியோ சீட் வாங்கி, செல்வகணபதியை வரவைத்து வாக்குறுதியுடன் பிரச்சாரம் செய்யச் செய்து, வெற்றியும் பெற்றார் இளங்கோவன். பின்னர் மா.செ.வான மஞ்சினி முருகேசனிடம் ஒட்டிக்கொண்டு, அவருக்குத் தேவையானதை நிறைவேற்றினார். மஞ்சினியிடம் எல்லா வகையிலும் திறமையான ஆள் ஒருவர் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவர, இளங்கோவனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அறிமுகம் ஏற்பட்டது. தேவையானவற்றை நிறைவேற்றித் தந்தார் இளங்கோவன். எடப்பாடி பழனிசாமி மூலமாக செங்கோட்டையன், சசிகலா, டிடிவி தினகரன், ராவணன் எனத் தொடர்பு ஏற்பட்டு, ஜெ. வரை அறிமுகம் கிடைத்தது. 2013இல் இளங்கோவனுக்கு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் பதவியையும் வாங்கிக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை 'பெரியவர்' என்றும், இளங்கோவனை 'சின்னவர்' என்றும் சொல்லும் அளவுக்கு செல்வாக்கை வளர்த்துக்கொண்டார்.

 

அதிமுகவில் இருக்கும் 'சித்தப்பு' நடிகர் ஒருவருக்கும் இளங்கோவனுக்கும் நல்ல நெருக்கம் உண்டு. அதன் மூலம் பெரிய மனிதர்களின் பசிக்கான தேவைகளும் நிறைவேற்றப்பட்டன. 2016 தேர்தலில், பறக்கும் படையினரே யூகிக்க முடியாத வகையில் கூட்டுறவு வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்து, அங்கிருந்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து எடப்பாடி பழனிசாமியை அசத்தினார் இளங்கோவன். 2017இல் எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும், அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் இளங்கோவனின் அதிகாரம் பெரிய அளவில் கொடிகட்டி பறந்தது.

 

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நேரத்தில், இளங்கோவன் தன்னிடம் 'லிக்விட்' ஆக இருந்த பணத்தை எல்லாம் ஆத்தூரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மூலமாக சிலருக்கு மருத்துவமனைகள் கட்டுவதற்கும், சில பைனான்ஸ் அதிபர்களுக்கும், நகைக்கடை உரிமையாளர்களுக்கும் முதலீடாக கொடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். இப்போது விஜிலன்ஸ் ரெய்டில் சிக்கியுள்ள இளங்கோவனின் வலதுகரமான குபாய் என்கிற குபேந்திரனும்கூட பண மதிப்பிழப்பு காலத்தில்தான் பெரிய அளவில் நகைக்கடைகளை விரிவாக்கம் செய்திருக்கிறார். உஷாராக முன்கூட்டியே ஒளித்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும், ரெய்டில் விடுபட்டவர்களையும் தோண்டித் துருவும்போது, எடப்பாடி பழனிசாமிவரை சிக்கல் நீளும்" என்கிறார்கள் இளங்கோவனை அறிந்தவர்கள். தனக்கு மிகவும் நெருக்கமான இளங்கோவன் வரைக்கும் விஜிலன்ஸ் ரெய்டு நடந்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி ஒருவித அச்சத்தில் இருக்கிறார் என்கின்றனர் அவரது வட்டாரத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்