Skip to main content

'இது தான் முதல்வர் வலியுறுத்தும் திராவிட மாடலா? '- பாமக அன்புமணி சாடல்   

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Is this the Dravidian model that the Chief Minister is insisting on? '-Pamaka Anbumani Sadal

தருமபுரியில் வயலில் மது அருந்தியதை தட்டிக் கேட்ட உழவர் கைது செய்யப்பட்டது கண்டித்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வயலில் மது அருந்தி, வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக்கேட்ட அந்த வயலின் உரிமையாளரான சரவணன் என்ற உழவர் குடிகாரர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பொது இடங்களில் சட்டவிரோதமாக மது அருந்துவது மட்டுமின்றி, அதை தட்டிக்கேட்பவர்களை கொடூரமாக குத்திக் கொலை செய்யும் அளவுக்கு குடிகாரர்களுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியும், கவலையுமளிக்கிறது. இது தான் திராவிட மாடலா? என்ற வினாவும் எழுகிறது.

காரிமங்கலத்தில் இருந்து மொரப்பூர் செல்லும் சாலையில் பெரியமிட்டஅள்ளி கிராமத்தில் சாலையை ஒட்டியுள்ள சரவணன் என்ற உழவருக்கு சொந்தமான நிலத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். பல மணி நேரமாக நீண்ட மது விருந்தின் ஒரு கட்டத்தில் அவர்களுக்கிடையே சண்டை மூண்டது. அப்போது அங்கு வந்த நிலத்தின் உரிமையாளர் சரவணன், தமது நிலத்தில் மது அருந்தகூடாது என்று கூறி, அங்கிருந்து வெளியேறும்படி எச்சரித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அங்கிருந்து புறப்பட்ட சரவணனை குடிபோதையில் இருந்த 10 பேரும் துரத்திச் சென்று கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். கொலைகாரர்களில் மூவரை அங்கிருந்த பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த நிலையில், மீதமுள்ளவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட கொலைகாரர்கள் அனைவரும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. காரிமங்கலம் & மொரப்பூர் சாலையில் இரு இடங்களில் அரசு மதுக்கடைகள் இருப்பதும், அங்கு மது அருந்துபவர்கள் அருகிலுள்ள திறந்தவெளிகளில் மது அருந்துவதை காவல்துறை தடுக்காததும் தான் சரவணனை படுகொலை செய்யும் அளவுக்கு குடிகாரர்களுக்கு துணிச்சல் ஏற்படுவதற்கு காரணமாகும். இந்த படுகொலைக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

கொண்டாட்டங்களுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் மது அருந்தும் வழக்கம் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் உள்ளது. ஆனால், மது அருந்துவதை மட்டுமே இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை  அனைத்துத் தரப்பினரின் முழு நேரத் தொழிலாக மாற்றியிருப்பது தமிழகத்தை ஆண்ட, ஆளும்கட்சிகளின் சாதனை ஆகும். எந்த வேலைக்கும் செல்லாமல், ஏதேனும் ஒரு வழியில் பணத்தைச் சேர்த்து மது அருந்துவது, அதற்கான பணத்தைத் திரட்ட எந்த குற்றத்தையும் செய்யத் தயாராக இருப்பது, விருப்பம் போல பொது இடங்களிலும், பெண்களும், மாணவிகளும் நடமாடும் பகுதிகளிலும் சட்டவிரோதமாக மது அருந்துவது, அதை எவரேனும் தட்டிக் கேட்டால் கேலி செய்வது, கத்தியால் குத்திக் கொலை செய்வது என்ற அளவுக்கு மக்களை மிருகங்களாக்கி வைத்திருக்கிறது தமிழக அரசின் குடிக்கொள்கை.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் மட்டும் இந்த அவலம் நிலவவில்லை. தமிழ்நாடு முழுவதும்  இதே அவலம் தான் நீடிக்கிறது. பள்ளிகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களும், மாணவிகளும் பேருந்திலேயே மது அருந்துவது, வகுப்பறைகளில் பிறந்தநாள் விருந்து வைத்து மது அருந்தி மயங்கி விழுவது, மது போதையில் மாணவிகள் சாலையில் ரகளையில் ஈடுபடுவது போன்றவை அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. மதுவுக்கு எதிராக போராடிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வழியில் வந்ததாகக் கூறிக் கொள்ளும் ஆட்சியாளர்கள், மதுவை ஆறாக ஓட விட்டது தான் இத்தனை அவலங்களுக்கும் காரணமாகும். மதுவும், போதையும் தமிழ்நாட்டின் பொது அடையாளங்களாகி விட்டன.

தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனில் தமிழக அரசுக்கு கிஞ்சிற்றும் அக்கறை இருந்திருந்தால், மதுக் கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர், உழவர்கள் உள்ளிட்டோரின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் மது விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் போதும் என்று கருதும் தமிழக அரசு, சட்டம் & ஒழுங்கு, பொது அமைதி உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்படாமல் மது வணிகத்தை ஊக்குவிப்பதில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறது. அதனால், பேரழிவுப் பாதையில் தமிழ்நாடு வேகமாக வெற்றிநடை போட்டு பயணித்துக் கொண்டிருக்கிறது. இது தான் முதல்வர் வலியுறுத்தும் திராவிட மாடலா? என்பதை தமிழக அரசு தான் விளக்க வேண்டும்.

ஒருபுறம் மது என்றால், இன்னொருபுறம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. மது கிடைக்காத இடங்களில் கூட கஞ்சா கிடைக்கிறது. மாணவர்கள் கஞ்சா போதையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களைத் தாக்கும் அவலம் உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், இது அனைத்து வகையிலும் பெருங்கேடாக அமையும்.

இதேநிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் இன்னும் சில ஆண்டுகளில் கூலி வேலையில் தொடங்கி, மென்பொருள் வேலை வரை எந்த வேலை செய்யவும் ஆட்கள் இருக்க மாட்டார்கள். மது விற்பனை மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.45,000 கோடியைத் தான் தமிழக அரசு பெரிதாக நினைக்கிறது. ஆனால், மதுவுக்கு அடிமையானதால் தமிழகத்தின் மனிதவளம் சீரழிந்து கொண்டிருக்கிறது. அதனால், தமிழ்நாடு, அதன் ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில்  20 விழுக்காட்டை, அதாவது ரூ. 5.60 லட்சம் கோடியை இழந்து கொண்டிருக்கிறது. மதுவையும், கஞ்சாவையும் ஒழித்து இளைஞர் சமுதாயத்தைக் காப்பாற்றாமல், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதாலோ, ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி மதிப்பை உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிப்பதாலோ எந்த பயனும் இல்லை. சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி,  தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். குடிகாரர்களால் கொல்லப்பட்ட உழவர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்