Skip to main content

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு; ஓபிஎஸ் எச்சரிக்கை

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

Defamation case against Edappadi Palaniswami; OPS alert

 

தேவையற்ற குற்றச்சாட்டுகளை ஈபிஎஸ் தொடர்ந்து கூறினால், ஈபிஎஸ் மேல் அவதூறு வழக்கு தொடர்வேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

 

அதிமுகவின் கட்சிக்கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியவற்றைப் பயன்படுத்தி பன்னீர்செல்வம் கொடுக்கும் அறிவிப்புகளுக்கு எதிராக விளக்கம் கேட்டு ஈபிஎஸ் தரப்பு ஓ.பி.எஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

 

அந்த நோட்டீஸில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொருளாளர் என அறிவித்துக் கொண்டு தொடர்ந்து கட்சியின் தலைமை அலுவலகப் பெயரை கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டும், நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

மேலும், கட்சியின் பொறுப்பு ஈபிஎஸ் வசம் இருப்பதால், ஓபிஎஸ் இது போன்று செயல்படுவது குறித்து சட்டவிளக்கமும் கேட்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இது போன்ற செயலில் ஓபிஎஸ் தொடர்ந்து ஈடுபட்டால் அதற்கான எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

 

ஓபிஎஸ் தற்போது அந்த நோட்டீஸ்க்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அதிமுக எந்த நோக்கத்திற்காக துவங்கப்பட்டதோ அதற்கு நேரெதிராக ஈபிஎஸ் செயல்படுகிறார். ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து என்னை பதவிநீக்கம் செய்ய வேண்டுமானால் அதற்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுக்கே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவால் என்னை பதவியில் இருந்து நீக்க முடியாது. 

 

மேலும், தேவையற்ற குற்றச்சாட்டுகளை ஈபிஎஸ் தொடர்ந்து கூறினால் ஈபிஎஸ் மேல் அவதூறு வழக்கு தொடர்வேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார். கட்சி அலுவலக சாவி வழக்கு என்பது சிவில் வழக்கு. அது கட்சிக் கட்டுப்பாடு சம்பந்தப்பட்டது அல்ல. கட்சியில் அலுவலக சாவி ஒருவரிடம் இருப்பதாலேயே அவர் கட்சிக்கு உரிமை கொண்டாட முடியாது எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்