Skip to main content

12 லட்சம் ஓட்டு பதிவாகும்;அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும்;எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம் :  ஐ.பி.யின்அதிரடி பேச்சு!

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

 


திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக ஒட்டன்சத்திரம் ஜவ்வாது பட்டியை சேர்ந்த வேலுச்சாமியை திமுக வேட்பாளராக தலைவர் ஸ்டாலின் களம் இறங்கி இருக்கிறார்.   அதன் அடிப்படையில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல், பழநி,  ஒட்டன்சத்திரம், நத்தம், ஆத்தூர்,  நிலக்கோட்டை ஆகிய  ஆறு  சட்டமன்ற தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டத்தை கழக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் அமைச்சருமான ஐ. பெரியசாமி தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளரும்  எம்எல்ஏவுமான சக்கரபாண, .கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் ஆகியோர் அதிரடியாக செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டி வேட்பாளர் வேலுச்சாமியை அறிமுகப்படுத்தி தேர்தலுக்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.  அதுபோல் திண்டுக்கல் தொகுதியில் நகரம் ஒன்றிய கழகம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

 

i

 

இக்கூட்டத்திற்கு  கட்சிக்காரர்களுடன் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.       இக்கூட்டத்தில் பேசிய வேட்பாளர் வேலுச்சாமியோ... தலைவர் என்னை இத்தொகுதி வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்.  அதன் மூலம் இத்தொகுதியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி மூலம் நான் அமோகமாக வெற்றி பெறுவேன்.  நான் வெற்றி பெற்றால் தொகுதி மக்களின் நலனுக்காக திண்டுக்கல்லில் அலுவலகம் போட்டு அமைத்து 24 மணி நேரமும் உங்களுக்காகவே உழைப்பேன்.

 

 எந்த நேரத்திலும் என்னை சந்தித்து உங்களுடைய குறைகளையும் கோரிக்கைகளையும் என்னிடம் சொல்லலாம்.   அதுபோல் தொகுதி வளர்ச்சிக்காகவும் மக்களின் குறைகளையும்,  கோரிக்கைகளையும் பராளுமன்றத்தில் எடுத்து கூறி பல திட்டங்களை கொண்டு வருவேன்.  எனக்கு தமிழ்,  ஹிந்தி மலையாளம்,  கன்னடம் என நான்கு மொழிகளும் தெரியும்.   எந்த மொழியிலும் பாராளுமன்றத்தில் பேசினாலும் அந்த மொழியிலேயே நானும் பேசி நமது தொகுதி மக்களுக்கு இதுவரை கொண்டு வராத பல திட்டங்களை தொகுதி மக்களுக்காக போராடி கொண்டு வருவேன் என உறுதி கொடுத்தார் . 


     அதன் பின் இறுதியாக பேசிய கழக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஐ பெரியசாமியோ..... 

கடந்த டிசம்பர் 19ஆம் தேதி தான் பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் இந்த ஆட்சியின் கோடிக்கணக்கான ஊழலை பட்டியலிட்டு கவர்னரிடம் கொடுத்தார்.  அப்படி இந்த ஆட்சியின் இபிஎஸ், ஓபிஎஸ் பற்றி புகார் கொடுத்து விட்டு தற்பொழுது அந்த  கட்சியுடனேயே கூட்டணி   வைத்திருக்கும் பாமகவுக்கு தொகுதியில் ஓட்டு கேட்க என்ன தகுதி இருக்கு.      

 

i


கடந்த தலைவர் ஆட்சியின் போது தமிழகத்தில் வரி உயர்த்தப்பட்டது . அப்பொழுது நான் அமைச்சராக இருந்ததால் எனது திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு மற்றும் வியாபாரிகளுக்கு எந்த ஒரு வரியையும் உயர்த்தக் கூடாது என தலைவரிடம் போராடினேன் .    அதன்படி  மாவட்டத்தில் ஒரு பைசா கூட வரி உயர்த்தாமல் இருந்தேன்.   ஆனால் இன்று  500 ரூபாய் இருந்த இடத்தில் ஆயிரம் ரூபாயும் 5000 ரூபாய் இருந்த இடத்தில்  பத்தாயிரம் ரூபாய் என 100% வரியை பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் சுமத்தியிருக்கிறார்கள்.    இதையெல்லாம் இங்குள்ள 48 கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு பிட் நோட்டீஸ் மூலம் பட்டியல் போட்டு அச்சடித்து வீடு வீடாக கொடுக்க வேண்டும்.   அப்படி கொடுத்தீர்கள் என்றால் வரக்கூடிய உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒரு அதிமுக கவுன்சிலர் கூட இங்கு வர முடியாது.   அதுபோல் ஜிஎஸ்டி வரியை போட்டு  நாம் சாப்பிடும் சாப்பாட்டுக்கு கூட வரி கட்ட வைக்கிற அளவுக்கு மத்திய ஆட்சி இருந்துவருகிறது.    அதுபோல் 350 ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட கேஸ் சிலிண்டரையும் ஆயிரம் ரூபாய்க்கு ஆகிவிட்டது அதுபோல் கூடிய விரைவில் பஸ் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்த இருக்கிறார்கள்  இப்படி மாநிலத்திலும் மத்தியிலும் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் . 


பொள்ளாச்சி சம்பவம்  தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  இச் சம்பவத்தில் அமைச்சர் உறவினர் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பு  இருக்கிறது.    இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை விட அதற்கு மேல் தண்டனை கொடுக்க வேண்டும் என வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் கூட குரல் கொடுக்கிறார்கள்.    அந்த அளவுக்கு இந்த ஆட்சியில் இளம் பெண்களுக்கும். மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லை.   இதற்கு பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி வருகிறார்கள்.    அதன் மூலம்  வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும். 18 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.   இங்கு நம்மை எதிர்த்து போட்டி போடும் பாமக  வேட்பாளரை 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பேன் என அமைச்சர் கூறியிருக்கிறாராம் இத் தொகுதியில் பாமக மொத்தத்திற்கே மூன்று லட்சம் ஓட்டு தான் வாங்கும்.   அதைத்தான் அப்படி மாற்றி சொல்லி இருக்கிறார்.  இந்த பாராளுமன்ற தொகுதியில் 12 லட்சம் ஓட்டு பதிவாகும்.  அதில் 3 லட்சம் ஓட்டு பாமகவுக்கு போய்விடும் ஒரு லட்சம் ஓட்டு மற்ற கட்சிகளுக்கு போய்விடும் மீதி உள்ள எட்டு லட்சம் ஓட்டு நாம வாங்குவோம்.  அதில் பாமக வாங்கிய 3 லட்சம் ஓட்டை கழித்துவிட்டோம் என்றால் 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் நமது பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அமோகமாக வெற்றி பெறுவார் என  கணக்குப் போட்டு கூறியதை கேட்ட பொதுமக்கள் கைதட்டி கரவொலி எழுப்பினார்கள்.  அதோடு மேடையில் வேட்பாளர் வேலுச்சாமிக்கு கட்சிகார்களான ஆர்.ஆர்.வாசு உள்பட  சில உடன் பிறப்புகள் கேக் வெட்டி வேட்பாளருக்கு கொடுத்தனர். 

 


    இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் ஒட்டன் சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி. பழனி சட்டமன்ற உறுப்பினர்  ஐ பி செந்தில்குமார் மற்றும் கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்களுடன் ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி. திண்டுக்கல் நகர செயலாளர் ராஜப்பா. முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன்,  முன்னாள் சேர்மன் பசீர் அகமது,  மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜ், தண்டபாணி,  வர்த்தக அணி ஒன்றிய பொறுப்பாளரான பரமன்,  முன்னாள் ஒன்றிய தலைவரான சந்திரசேகர், முன்னாள் கவுன்சிலர் ஜானகிராமன் உள்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் இறுதியில் திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.

 

சார்ந்த செய்திகள்