Skip to main content

பாலியல் புகாரில் தமிழக சிறப்பு டி.ஜி.பி.! - விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தது உள்துறை!

Published on 24/02/2021 | Edited on 24/02/2021

 

ddd

 

தமிழகத்தில் தேர்தல்கால பணிகளுக்காக, சிறப்பு டிஜிபியாக ஏற்கனவே இருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபியின் அதிகாரங்களைக் குறைத்து நியமிக்கப்பட்டவர் ராஜேஷ்தாஸ். இவர், சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ்தாஸின் கணவர். இவர்மீது விவகாரமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழும். சமீபத்தில் பெரம்பலூருக்கும் திருச்சிக்கும் முதல்வர் சென்றபோது அவரது பாதுகாப்புக்காக கூடுதல் டிஜிபியான ராஜேஷ்தாஸ் சென்றார். 

 

அப்போது பணியில் இருந்த பெண் எஸ்.பி. ஒருவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அவரிடம் பாலியல் அத்துமீறல்களைச் செய்திருக்கிறார் ராஜேஷ்தாஸ். ''எனக்கு ஆளும் கட்சி சப்போர்ட் இருக்கு. உன்னால ஒன்னும் பண்ண முடியாது'' என ராஜேஷ்தாஸ் மிரட்டியுள்ளார். 

 

அவரது இந்த அடாத செயலை எதிர்த்து அந்தப் பெண் எஸ்.பி. காரை நிறுத்தச்சொல்லி இறங்கியிருக்கிறார். மறுபடியும் முதல்வர் திரும்பி வரும்பொழுது தனது சில்மிஷங்களை ராஜேஷ்தாஸ் அரங்கேற்ற, டென்சன் ஆன அந்தப் பெண் எஸ்.பி., நேராகச் சென்னைக்கு வந்து டிஜிபி, உள்துறைச் செயலாளர், முதல்வர் என ராஜேஷ்தாஸ் மீது புகார் அளித்துள்ளார். 

 

உயரதிகாரியான ராஜேஷ்தாஸின் அனுமதியில்லாமல் பெரம்பலூரைவிட்டு அவர் சென்னைக்குச் சென்றதை தெரியப்படுத்தவில்லை எனப் பெரம்பலூர் மாவட்ட தனி ஆய்வாளர் அனிதாவை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார் ராஜேஷ்தாஸ். 

 

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த திமுகவைச் சேர்ந்த கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் தமிழகத்தில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு என அந்தப் பெண் எஸ்.பியின் புகாரை மேற்கோள்காட்டி அறிக்கைவிட, ராஜேஸ்தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஒரு கமிட்டியை நியமித்து தமிழக அரசின் உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

இந்த விசாரணைக் குழுவில் ஜெயஸ்ரீ ரகுநந்தன், சீமா அகர்வால், ஏ.அருண், பி.சாமூண்டீஸ்வரி, வி.கே.ரமேஷ்பாபு, லோரெட்டா ஜோனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்