Skip to main content

ஓ.பி.எஸ்க்கு எதிரான மனநிலையில் அண்ணாமலை! - இடைத்தேர்தல் அக்கப்போர்!

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அதிமுக வேட்பாளர் தென்னரசு தாக்கல் செய்துவிட்ட நிலையில், ‘ஜனநாயகக் கூத்து நடந்திருக்கிறது’ என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.

 

அதிமுக பொதுக்குழு உறுப்பினரான தேனி மாவட்டம் – அரண்மனைபுதூரைச் சேர்ந்த சுப்புராஜ் நம்மிடம், “ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரா தென்னரசை தேர்வு செய்யுறது சம்பந்தமா கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பெயர்ல எனக்கு அனுப்பப்பட்ட 4-ஆம் தேதியிட்ட கடிதமும், வாக்குச் சீட்டும்  6-ஆம் தேதி இரவுதான் என் கைக்கு கிடைச்சது. அந்தக் கடிதத்துல 5-ஆம் தேதி இரவு 7 மணிக்குள்ள சென்னைல இருக்கிற அதிமுக தலைமைக்கழக அலுவலகத்துல வச்சு அவைத்தலைவர்கிட்ட கொடுக்கணும்னு குறிப்பிட்டிருந்தாங்க. அது எப்படி 6-ஆம் தேதி கைக்கு கிடைச்ச வாக்குச்சீட்டை 5-ஆம் தேதி இரவு கொடுக்கமுடியும்? இந்தக் கொடுமையை கட்சிக்காரங்க எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க. நாங்களும் சிரிச்சிட்டு அதிமுக கட்சியை எப்படியெல்லாம் நாசமாக்குறாங்கன்னு வருத்தப்பட்டுட்டு இருக்க வேண்டியதுதான்.

 

எனக்கு தெரிஞ்சு, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லிக்கு போற அவசரத்துல, லோக்கல்ல (சென்னை) இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள்கிட்ட வேணும்னா அஃபிடவிட்ல (ஒப்புதல் படிவங்கள்) கையெழுத்து வாங்கிருப்பாங்க. அதுவும் இங்லீஷ்ல இருந்த அஃபிடவிட்ல புரிஞ்சு கையெழுத்து போட்டாங்களோ, புரியாம கையெழுத்து போட்டாங்களோ? மத்தபடி, அவங்களுக்கு வேண்டிய பொதுக்குழு உறுப்பினர்கள்தானேன்னு, அஃபிடவிட்ல ஃபோர்ஜரி கையெழுத்து போட்டுத்தான் தேர்தல் ஆணையத்துல கொடுத்திருப்பாங்க. இது எடப்பாடி சர்க்கிள்ல இருந்தே எனக்கு கிடைச்ச தகவல்.  

 

இன்னொரு கொடுமையும் நடந்திருக்கு. கழக அவைத்தலைவர் அனுப்புன லெட்டர்ல, தென்னரசை முன்மொழிந்தார்ங்கிற இடத்துல எடப்பாடி K.பழனிசாமி-ன்னு பெயரை மட்டும் தான் போட்டிருந்தாங்க. இடைக்காலப் பொதுச்செயலாளருன்னோ, இணை ஒருங்கிணைப்பாளருன்னோ பெயருக்கு முன்னால போடல. சட்டத்த மதிக்கணும்கிற பயத்துலதான், தமிழ்மகன் உசேன் எடப்பாடி பழனிசாமி கட்சில என்ன பொறுப்புல இருக்காருங்கிறத போடல. ஆனா, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை என்ன பண்ணிருக்காருன்னா.. அவரோட அறிக்கைல நன்றி சொல்லும்போது, இடைக்காலப் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமின்னு போட்டிருக்காரு. அதேநேரத்துல, பொறுப்பு எதையும் போடாம அண்ணன் ஓ.பன்னீர்செல்வம்னு போட்ருக்காரு. எந்த அளவுக்கு ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிரான மனநிலைல அண்ணாமலை இருக்காரு பாருங்க.” எனக் குமுறினார்.

 

‘ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் எதுக்காக பிரிஞ்சு நின்னு கோர்ட், கேஸுன்னு அலையணும்? இதெல்லாம் எந்த விதத்துலயும் கட்சிக்கு நல்லது இல்ல..’ என்று தீவிர அதிமுக தொண்டர்களும் புலம்பவே செய்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்