Skip to main content

அ.ம.மு.க.வுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Allotment of election symbol to AMmK

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. டி.டி.வி. தினகரன் வரும் 24 ஆம் தேதி தேனியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த பின் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு கேட்ட 2 தொகுதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். எந்தெந்த தொகுதியில் போட்டி என்பதை பா.ஜ.க. அறிவிக்கும். நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. அ.ம.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில் குக்கர் சின்னத்தில் தான் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத்தான் எங்கள் கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. அதன் அடிப்படையில் ஒரு தொகுதி போதும் என்றுதான் கூறினேன். குறைந்தபட்சம் 2 தொகுதிகளாவது போட்டியிடுங்கள் என பா.ஜ.க. கூறியது” எனத் தெரிவித்திருந்தார்.

Allotment of election symbol to AMmK

இதற்கிடையே வரும் மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க.விற்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் டி.டி.வி. தினகரனின் கோரிக்கையை ஏற்று அ.ம.மு.க.விற்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அ.ம.மு.க., பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறது.

சார்ந்த செய்திகள்