Skip to main content

“அதிமுகவுக்கும் கொள்கை இருக்கிறது..” - இ.பி.எஸ். 

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

"ADMK also has a policy.." - E.P.S.

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் இன்று மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. இதே திமுக 1999ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லையா. அதே ஆட்சிக் காலத்தில் திமுக எம்.பி.க்கள் பாஜக கூட்டணியில் அமைச்சரவையில் இடம் பெறவில்லையா. ஆகவே திமுக தான் காலத்திற்கு ஏற்றதுபோல், நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடிய கட்சி. 

 

கூட்டணி என்பது அனைத்து கட்சிகளும், தேர்தல் வரும்போது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவகையில், அமைக்கின்ற நிகழ்வு அது அவ்வளவுதான். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உள்ளது. அந்தவகையில் அதிமுகவுக்கும் கொள்கை இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். 

 

முதல்வர் ஸ்டாலின், ‘நாங்கள் மிசாவை பார்த்தவர்கள்’ என்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் அவசரக்காலம் வந்தது. அதில் தான் மிசா வந்தது. அதில் எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள், ஆட்சிக்கும், அதிகாரத்திற்கும், பதவிக்கும் திமுகவும், ஸ்டாலினும், அவரது குடும்பமும் காங்கிரஸுக்கு அடிமையாக இருந்துகொண்டிருக்கிறது. 

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எங்கள் நிர்வாகிகளும், கட்சியினரும் அரும்பணி ஆற்றிக்கொண்டிருக்கிறோம். அமித்ஷா அவரது கருத்தை தெரிவிக்கிறார்; அதுவேறு. எங்களின் கருத்து இதுதான். 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறும் சூழ்நிலை பிரகாசமாக இருக்கிறது. 

 

எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, ஊழல் புரிந்த அமைச்சர் இன்று கைதாகியுள்ள நிலையில், அவரை தொடர்ந்து அமைச்சராக வைத்திருப்பேன் என்று சொல்வது மிக தவறு. கடந்த கால வரலாற்றில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, ஆலடி அருணா ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டபோது அவர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதேபோல், என்.கே.கே.பி. ராஜா வழக்கில் சம்பந்தப்பட்டபோது அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது ஒரு வழக்கு வந்தது அவரும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

 

தமிழ்நாட்டிற்கு என்று ஒரு அரசியல் நாகரிகம் இருக்கிறது. அதனை கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாடு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைப்பார்கள். இன்று சிறையில் இருப்பவர் அமைச்சராக இருந்தால் அது எப்படி சரியாக இருக்கும். எனவே இதனை ஒரு மோசமான உதாரணமாக பார்க்கிறோம். முதலமைச்சர் அரசியல் நாகரிகம் கருதி அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை விடுவிக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கிறார்கள்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்