Skip to main content

தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டுவர முதல்வரின் டெல்லிப் பயணம் அமையட்டும்... கருணாஸ்

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

kk

 

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டுவர முதல்வரின் டெல்லிப் பயணம் அமையட்டும் என்று முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் சேது. கருணாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலான புதிய ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தும், அதை உடனடியாக செயல்படுத்தியும் கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் மத்தியில் நல்லாட்சிக்கான வரவேற்பையும் பெற்றுவருவது பாராட்டுக்குரியது. முக்குலத்தோர் புலிப்படை சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு 17.06.2021 (இன்று) தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முதல்முறையாக தில்லி சென்று பிரதமரை சந்திக்கிறார்.

 

கடந்த அஇஅதிமுக ஆட்சியில் தமிழர் உரிமைகள் அனைத்தும் பறிபோய்விட்டன. பாஜக மத்திய அரசு தமிழ்நாட்டை கடுமையாக வஞ்சித்துவிட்டது. புதிய முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்படும் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே இருந்த அஇஅதிமுக அரசை போல் மத்திய அரசுக்கு எந்த சூழலிலும் வளைந்து கொடுக்காது தமிழ்நாட்டிற்குரிய உரிமைகளை கேட்டு பெற வேண்டும். 

 

kk

 

கடந்த ஆட்சி, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை - கஜானாவை காலிசெய்துவிட்டுத்தான் சென்றது. ஆனாலும் அதையெல்லாம் கடந்து புதிய முதல்வர் ஸ்டாலின் வளர்ச்சிக்கான பாதையில் தமிழகத்தை அழைத்துச்செல்வது பாராட்டுக்குரியது.

 

கரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால் ஆக்சிஜன், கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவை குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதங்கள் எழுதினார். செங்கல்பட்டில் கரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்குவது குறித்தும் கடிதம் எழுதினார்.

 

ஆகவே, ‘மத்திய அரசு தொடர்புடைய நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். 7 தமிழர் விடுதலையை காலம் தாழ்த்தாது உடனடியாக செயல்படுத்த வேண்டும். தற்போது தமிழ்நாட்டின் செலவுகள் அதிகரித்துவரும் நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கித்தொகையான 12,000 கோடி ரூபாயை உடனடியாக தரவேண்டும். தமிழகத்திற்கு கூடுதல் கரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும்.

 

கரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ பயன்பாட்டுக் கருவிகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கான கரோனா தடுப்பு மருந்துகளை குறைக்காமல் வழங்கிட வேண்டும். தடுப்பு மருந்து வழங்குவதில் தமிழ்நாட்டிற்கு பாரபட்சம் காட்டுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

 

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து பெட்ரோல் ரூபாய் 50க்கும், டீசல் விலை 40க்கும் விற்பனை செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்.’

 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் பேச வேண்டும். தமிழ்நாட்டிற்கான உரிமையை விட்டுக்கொடுக்காது மீட்டுவர வேண்டும் என தமிழ்நாடு முதல்வரை முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்