Skip to main content

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்