Skip to main content

"நமக்கு பல சவால்கள் உள்ளன" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

AMIT SHAH

 

இந்திய எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கினை ஆற்றிவரும் எல்லை பாதுகாப்புப் படையின், வருடாந்திர விருது வழங்கும் விழா இன்று (17.07.2021) நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை இணையமைச்சர்கள், உள்துறைச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு, வீர மரணமடைந்தவர்களுக்கும், பணியில் வீரதீர செயல்களைப் புரிந்தவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

 

இதன்பிறகு நிகழ்வில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எல்லையைப் பாதுகாக்கும் படையினரால் இந்தியா பெருமையடைகிறது என தெரிவித்துள்ளார். விருது வழங்கும் விழாவில் அமித்ஷா ஆற்றிய உரை வருமாறு:

 

“உயர்ந்த தியாகத்தை செய்தவர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். உலக வரைபடத்தில் இந்தியா தனது நிலையைப் பலப்படுத்திக்கொண்டுவருகிறது. இந்தத் துணிச்சலான நெஞ்சம் கொண்டவர்களையும், போர் வீரர்களையும் நம்மால் மறந்துவிட முடியாது. எல்லை பாதுகாப்புப் படை மற்றும் எல்லைகளைப் பாதுகாக்கும் நமது துணை ராணுவப் படைகள் ஆகியவற்றால் உலக வரைபடத்தில் இந்தியாவுக்குப் பெருமை சேர்கிறது.

 

முந்தைய கிழக்கு பாகிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்பட்டன. பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். இப்போது வங்கதேசம் ஒரு சுதந்திர தேசமாக உள்ளது. அதில் எல்லை பாதுகாப்புப் படை முக்கியப் பங்காற்றியது. அதை ருஸ்தாம்ஜி (எல்லை பாதுகாப்பு படை நிறுவனர்) மேற்பார்வையிட்டார். 7,516 கி.மீ கரையோர எல்லையையும், 15,000 கி.மீ தரை எல்லையையும் கொண்டு நாம் முன்னேற வேண்டியிருந்தது. நீண்ட காலமாக சில முன்னுரிமைகள் காரணமாக எல்லை பாதுகாப்பு குறித்து எந்த விவாதங்களும் எழவில்லை. அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசு அமைந்தபோது எல்லை பிரச்சனை தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

எல்லை பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்பு. நமக்குப் பல சவால்கள் உள்ளன. ஆனால், நமது துணை ராணுவப் படைகள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பிரதமர் மோடியின் கீழ் நம்மிடம் சுதந்திரமான பாதுகாப்புக் கொள்கை உள்ளது. இதன்மூலம் நமது இறையாண்மைக்கு சவால் விடுத்தவர்களின் மொழியிலேயே அவர்களுக்குப் பதிலளிக்கப்பட்டது.”

இவ்வாறு அமித்ஷா உரையாற்றினார்.

 

 

சார்ந்த செய்திகள்