Skip to main content

"அம்பானி ஃபைலுக்கு ஓகே சொன்னா 150 கோடி கிடைக்கும்னாங்க" - மேகாலயா ஆளுநர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Published on 22/10/2021 | Edited on 23/10/2021

 

meghalaya governor

 

மேகாலயாவில் ஆளுநராக இருப்பவர் சத்ய பால் மாலிக். இவர் இதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்தார். இந்தநிலையில் இவர், தான் ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்தபோது அம்பானி தொடர்பான கோப்பும், ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்த நபரின் கோப்புக்கும் அனுமதி அளித்தால், கோப்புக்கு தலா 300 கோடி கிடைக்கும் எனத் தனது செயலாளர்கள் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; காஷ்மீருக்குச் சென்ற பிறகு, இரண்டு கோப்புகள் (அனுமதிக்காக) என்னிடம் வந்தன. ஒன்று அம்பானியைச் சேர்ந்தது. மற்றொன்று முந்தைய மெஹபூபா முப்தி தலைமையிலான (பிடிபி-பாஜக கூட்டணி) அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஆர்எஸ்எஸ்-தொடர்புடைய நபருடையது. அவர் தன்னை பிரதமருக்கு நெருக்கமானவர் எனக் கூறிக்கொண்டார்.

 

இரண்டு துறைகளிலும் ஊழல் இருப்பதாகச் செயலாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதன்படி நான் இரண்டு ஒப்பந்தங்களையும் ரத்து செய்தேன். கோப்புகளை அனுமதித்தால் இரண்டு கோப்புகளுக்கும் தலா 150 கோடி கிடைக்கும் என செயலாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால், நான் ஐந்து குர்தா-பைஜாமாவுடன் வந்தேன். அதனுடைய கிளம்புவேன் என அவர்களிடம் தெரிவித்தேன்.

 

இந்த கோப்புகளுக்குத் தொடர்புடையவர்கள்,பிரதமரின் பெயரைப் பயன்படுத்தியதால், முன்னெச்சரிக்கையாகப் பிரதமரிடம் அந்த கோப்புகளைப் பற்றியும், ஊழல் பற்றியும் தெரிவித்தேன். நான் பதவியை விட்டு வெளியேறத் தயாராக இருக்கிறேன். ஆனால் பதவியில் இருந்தால் இரண்டு கோப்புகளையும் அனுமதிக்க மாட்டேன் எனத் தெரிவித்தேன். இவ்வாறு சத்ய பால் மாலிக் தெரிவித்தார்.

'

மேலும் தான் கூறியதற்குப் பிரதமர் மோடி, ஊழலில் சமரசம் செய்யத் தேவையில்லை எனத் தெரிவித்ததாகக் கூறியதோடு, அதற்காக பிரதமர் மோடியையும்  சத்ய பால் மாலிக் பாராட்டினார்.

 

சத்ய பால் மாலிக், தன்னிடம் வந்து கோப்புகள் குறித்த விவரத்தை விரிவாக விளக்கவில்லை. இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்குக் காப்பீடு வழங்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தோடு ஜம்மு காஷ்மீர் அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தை சத்ய பால் மாலிக் இரத்து செய்ததோடு, ஒப்பந்த நடைமுறை வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் நடைபெற்றதா என்பதை ஆய்வு செய்ய ஊழல் தடுப்பு பணியகத்திற்குப் பரிந்துரைத்தார். அதுதொடர்பான கோப்பையே சத்ய பால் மாலிக் தற்போது குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்