Skip to main content

“நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படும் முன் விக்டோரியா கவுரியின் செயல்பாடுகள் பரிசீலிக்கப்படும்” - உச்சநீதிமன்றம் 

Published on 07/02/2023 | Edited on 07/02/2023

 

Supreme Court dismissed the case against Victoria Gowri

 

நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படும் முன் ஒரு வருடத்திற்கு விக்டோரியா கவுரியின்  செயல்பாடுகள் பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி, வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய 5 பேர் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் விக்டோரியா கவுரியின் நியமனத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. விக்டோரியா கவுரி பாஜகவில் தீவிரமாகச் செயல்பட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வு கருத்துகளை முன்வைத்துள்ளார் என்று கூறி விக்டோரியா கவுரியை நீதிபதியாக பரிந்துரை செய்யக்கூடாது என்று சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டது. இருப்பினும் அவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் நேற்று உத்தரவிட்டிருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை தற்போது  நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பீ.ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய இரண்டு பேர் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்றது. அதே சமயத்தில் சென்னையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். 

 

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதிகளாக பதவியேற்ற முன்னுதாரணம் உள்ளதாகக் கூறி விக்டோரியா கவுரிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மாதிரியான விவகாரத்தின் போது கொலிஜியம் அமைப்பு அனைத்தையும் ஆராய்ந்த பிறகே முடிவுகளை எடுத்து வருகிறது. விக்டோரியா கவுரி தற்போது கூடுதல் நீதிபதியாகத்தான் பதவியேற்றிருக்கிறார். நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படும் முன் ஒரு வருடத்திற்கு அவருடைய செயல்பாடுகள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்