Skip to main content

"இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டத்தில் தள்ளும் அக்னிபத்" - சித்தராமையா விமர்சனம்

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

siddaramaiah slams agnipath scheme

 

இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள்சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு ஒன்றிய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. 

 

இந்நிலையில், மத்திய அரசின் இந்த புதிய திட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, "ராணுவ வீரர்களை நியமிக்கும் புதிய அக்னிபத் திட்டம் இளைஞர்களை வேலையில்லா திண்டாட்டத்தில் தள்ளும் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜக இந்த புதிய திட்டத்தைக் கைவிட்டு, தற்போதுள்ள நடைமுறையின்படி ராணுவ வீரர்களை நியமிக்க வேண்டும்.

 

2 கோடி வேலை வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, தற்போது இளைஞர்களுக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் மூடிமறைத்து வருகிறார். மோடி, ஆண்டுக்கு 2 கோடி வேலையில்லாத இளைஞர்களை உருவாக்குவதற்கான செயல்திட்டம் ஏதும் உங்களிடம் உள்ளதா? அக்னிபத் திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்களுக்கு தங்களின் வேலை வாய்ப்புகள் குறித்த பாதுகாப்பற்ற தன்மையும், எதிர்காலம் குறித்து நம்பகத்தன்மை இல்லாமையும் இருந்தால் முழுமையாக பணியில் ஈடுபட முடியுமா? படையினர் இந்த பாதுகாப்பின்மையை வளர்த்துக் கொண்டால் இது ஆபத்தானது அல்லவா?

 

நமது அர்ப்பணிப்புள்ள ராணுவ வீரர்களுக்குச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கி, வேலைப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அளவுக்கு பாஜக அரசாங்கம் திவாலாகிவிட்டதா? மோடி அரசின் திவால் நிலையை மறைக்க நமது பாதுகாப்போடு விளையாடக் கூடாது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்த முயன்ற பாஜக அரசுக்கு நம் நாட்டு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். நமது இளைஞர்கள் மற்றும் நமது வீரர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதற்கு மக்கள் மீண்டும் பாடம் புகட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 

அதேபோல, இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ், "ராணுவத்திற்குக் கடந்த 2 ஆண்டுகளாக ஆட்களைச் சேர்க்கவில்லை. இப்போது அக்னிபத் என்ற பெயரில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ராணுவ வீரர்களைச் சேர்ப்பதாக அரசு அறிவித்துள்ளது. 4 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் எதிர்காலம் என்ன?. ராணுவத்தில் சேருகிறவர்களில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தான் அதிகம். வசதி படைத்தவர்கள் மற்றும் தேசபக்தி குறித்து மேடைகளில் முழங்கும் தலைவர்களின் பிள்ளைகள் ராணுவத்தில் சேருவது இல்லை. 

 

ராணுவத்தில் சேரும் இந்த இளைஞர்களுக்குப் பணி பாதுகாப்பு தேவைப்படுகிறது. இதை மத்திய அரசு அறிந்துகொள்ள வேண்டும். ஓய்வு பெற்ற பிறகு ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கத்தில் இந்த அக்னிபத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாத அளவுக்கு நமது நாடு மோசமான நிலையில் உள்ளதா?. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகப் பிரதமர் மோடி கூறினார். அதை அவர் செய்யவில்லை. இப்போது அக்னிபத் என்ற பெயரில் நாடகமாடுகிறார்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்