Skip to main content

“பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது நாட்டை பிரிக்க முயன்றாரா?” - சித்தராமையா கேள்வி

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Siddaramaiah question Did PM Modi try to divide the country when he was the Chief Minister?

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தில், மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகா மாநிலத்திற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, டெல்லியில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று (07-02-24) போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், கர்நாடகா காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று (08-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்றத்தில் நாங்கள் தேசத்தை பிளவுபடுத்துகிறோம் என்று பிரதமர் மோடி பேசினார். ஆனால் அவர் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, அப்போதைய மத்திய அரசை கேள்வி எழுப்பினார். அதில் குஜராத் மாநிலம் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்துகிறது என்றும் அவர்கள் பிச்சைக்காரர்களா என்றும் கேட்டார். மேலும் அவர், டெல்லியின் கருணையில் நாங்கள் வாழ்கிறோமா? என்றும் கேட்டார். அப்போது அவர் நாட்டை பிரிக்க முயற்சித்தாரா? மாநில நலன் காக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். மக்களின் நலனை பாதுகாக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். கர்நாடகாவில் உள்ள பாஜக எம்.பி.க்கள் முதுகெலும்பு இல்லாதவர்களாக மத்திய அரசு சொல்வதைக் கேட்டு தலையை ஆட்டுவதாக உள்ளனர்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்