Skip to main content

பில்கிஸ் பானு வழக்கு;  “பா.ஜ.க.வின் முகத்திரை நீங்கியுள்ளது” - பிரியங்கா காந்தி விமர்சனம்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Priyanka Gandhi crictized BJP's for Bilgis Banu case

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் கைதாகி நீதிமன்றத்தினால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு கடந்த ஆண்டு விடுதலை செய்திருந்தது. அதாவது கோத்ரா வழக்கு தொடர்பாக குஜராத் அரசு அமைத்த சிறப்புக் குழுவின் பரிந்துரையின் படி நன்னடத்தை அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகக் கூறி குஜராத் அரசாங்கம் அவர்களைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக, அவர்கள் விடுதலையின்போது சிறை வாசலிலேயே மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தது சர்ச்சையாகி மேலும் பல விவாதங்களைக் கிளப்பி இருந்தது. அதே சமயம் இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனைக் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது எனக்  குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், நாகரத்தினா அமர்வு முன்பு இன்று (08-01-24) விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருவதால் 11 பேரை விடுவிப்பது குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவெடுக்க வேண்டும். 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது. மேலும் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையை காப்பது மிகவும் முக்கியமானது” எனத் தெரிவித்தனர். 

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இறுதியில் நீதி வென்றுவிட்டது. குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் பா.ஜ.க.வின் பெண்களுக்கு எதிரான கொள்கைகள் மீதான முகத்திரை நீங்கியுள்ளது. இந்த உத்தரவுக்குப் பிறகு, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை மேலும் வலுப்படும். பில்கிஸ் பானு தனது போராட்டத்தை தொடர எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்