Skip to main content

புதுச்சேரி சட்டசபை கூட்டம் வருகிற 22-ல் கூடுகிறது

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

 


புதுச்சேரி மாநிலத்திற்கான (பட்ஜெட்) நிதிநிலை அறிக்கை தாக்கல் சட்டசபை கூட்டம்  ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில்  நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்பின் சில மாதங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது.

p

இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதியன்று 5 மாதங்களுக்கான (ஏப்ரல் முதல் ஆகஸ்டு முடிய) அரசின் செலவினங்களுக்கு தேவையான இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதன்பின் கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி புதுவை சட்டசபை கூடியது. அந்த கூட்டத்தில் புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து பதவியேற்று கொண்டார்.

 

இந்தநிலையில் புதுவை மாநிலத்தின் பட்ஜெட் தொகையை இறுதி செய்ய மாநில திட்டக்குழு தலைவர் ஆளுநர் கிரண்பேடி தலைமையில் கடந்த 13-ந் தேதி திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாநிலத்தின் பட்ஜெட் தொகை ரூ.8,425 கோடி என மதிப்பிடப்பட்டது. இது தொடர்பான திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் சட்டசபை கூடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

 இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை கூட்டம் வருகிற 22-ந் தேதி காலை 9.35 மணிக்கு கூடுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் நேற்று வெளியிட்டார். இந்த சட்டசபை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படமாட்டாது. அன்றைய கூட்டத்தில் மாநிலத்தின் நீர் மேலாண்மை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஓரிரு நாட்கள் மட்டுமே இந்த கூட்டம் நடைபெறும் என்றும் தெரிகிறது. பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் மீண்டும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்.

 

சார்ந்த செய்திகள்