Skip to main content

300 பேரின் செல்ஃபோன்களை உளவு பார்த்த பெகாசஸ்...? சதிக்கு பின்னால் இருப்பது அமித்ஷாதான்... காங்கிரஸ் குற்றச்சாட்டு!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

Pegasus spying on 300 people's cell phones ...? Amit Shah is behind the conspiracy ... Congress accused!

 

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் பூதாகரமாகி நிற்கிறது. இந்நிலையில், உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்ஃபோன் எண்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் இந்திய அரசியல் தலைமைகள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்ஃபோன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா மட்டுமில்லாது பல்வேறு நாட்டு தலைவர்களின் உரையாடல்களும் இவ்வாறு கண்காணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில் இந்தியாவில் மட்டும் 300 பேர் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியது. 

 

இந்நிலையில், பிரான்ஸைச் சேர்ந்த ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ் என்ற நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த தி வயர், வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன்  உள்ளிட்ட பல ஊடக நிறுவனங்களும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வின் முடிவில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், அதேபோல் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிரகலாத் படேல் உள்ளிட்டோரின் செல்ஃபோன்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

cell phone

 

ராகுல்காந்தி பயன்படுத்தி வந்த இரண்டு செல்ஃபோன் எண்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்தபோது அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு அளித்த பெண்ணின் செல்ஃபோன் எண்ணும் அந்தப் பட்டியலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலருடைய செல்ஃபோன் எண்கள் உளவு பார்க்கப்பட்டது தொடர்பான முழு பட்டியல் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 

cell phone

 

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா, இந்த சதிக்குப் பின்னால் இருப்பது உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் என்றும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கூறியுள்ள அவர், கடந்த 2019ஆம் ஆண்டு மாநிலங்களவையில், 127 பேரின் வாட்ஸ்அப் எண்கள் பெகாசஸ் உளவு செயலியின் மூலம் பார்க்கப்பட்டிருக்கலாம் என்று அப்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார். அது தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது எனவும் காங்கிரஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 

cell phone

 

காங்கிரசின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, ''இந்தியாவை உலக அளவில் அவமானப்படுத்தும் நோக்கத்தில் பெகாசஸ் விவகாரத்தை சிலர் பயன்படுத்துகின்றனர். தங்களது சதி மூலம் தடையை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள், இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. சில சர்வதேச அமைப்புகள் இந்தியா வளர்ச்சி பெறுவதை விரும்பவில்லை'' என்று பதிலளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்