Skip to main content

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது பற்றி சோனியாவுடன் பேசவில்லை - சரத்பவார்

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

பாரதீய ஜனதாவுடன் மோதலை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. குடியரசு தலைவர் ஆட்சி அமலான பிறகு அந்த முயற்சியில் சிவசேனா தீவிரம் காட்டியது. இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனாவுடன் கைகோர்க்க முதலில் தயங்கிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், பின்னர் ஆட்சி அமைக்க சம்மதித்தன. இதற்காக மூன்று கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து பேசி கூட்டணி அரசில் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்தனர். அது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார். சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. 


இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரத் பவார் கூறியயதாவது, " மராட்டியத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து விரிவாக ஆலோசித்தோம். இந்த சந்திப்பின் போது ஏகே அந்தோணியும் உடன் இருந்தார்.  மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது குறித்து சோனியாகாந்தியுடன் ஆலோசிக்கவில்லை.  காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இரு கட்சிகள் விவகாரம் பற்றியே இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  170 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக சிவசேனா கூறியிருப்பது பற்றி தனக்கு தெரியாது" என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்