Skip to main content

“குறிப்பாகப் பெண்களைக் கண்காணிப்பதில் அமித்ஷா பெயர் பெற்றவர்” - பிரியங்கா காந்தி விமர்சனம்

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
 Priyanka Gandhi criticized Amit Shah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன் தினம் (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், உத்தரப் பிரதேசம் மாநிலம், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். நட்சத்திர தொகுதியான அமேதி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இராணிக்கு எதிராக ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார். ரேபரேலி தொகுதியில் ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ராகுல் காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

மேலும், அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா, ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், பிரியங்கா காந்தி இன்று (15-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க கூறியதில் துளியும் உண்மை இல்லை. யார் எப்போது, ​​எங்கே செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், குறிப்பாக பெண்கள் என்ன செய்கிறார்கள் ஒரு கண் வைத்திருப்பதில் அமித் ஷா பெயர் பெற்றவர். சில நாட்களுக்கு முன்பு நான் தாய்லாந்தில் இருக்கின்ற எனது மகளைப் பார்க்கச் சென்றிருந்தேன் என்று ஒரு தேர்தல் கூட்டத்தில் அமித் ஷா கூறியிருந்தார். ஆம், நான் தாய்லாந்திற்குச் சென்றேன். ஆனால் அவர் இதை எப்படி அறிந்தார் என்று அவர் சொல்வாரா?. மேலும், அவர் அனைத்து தகவல்களையும் வைத்திருக்கும் போது, அவர் ஏன் இவ்வாறு பொய் சொல்ல வேண்டும்?” எனப் பேசினார்.

சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க சார்பில் ரேபரேலி தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “வெற்றி பெற்ற பிறகு, சோனியா காந்தியும் அவரது குடும்பத்தினரும் எத்தனை முறை உங்களைப் பார்க்க வந்தார்கள்? சோனியா காந்திக்கு பொதுவாக உடல்நலப் பிரச்சினைகள் இருக்கும். ஆனால் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியின் நிலை என்ன? கடந்த சில வருடங்களாக இத்தொகுதியில் பல அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்