Skip to main content

''எனக்கு 15 வயது இருக்கும் போதே...'' மேடையில்  நா தழுதழுத்த இளம்பெண்-அரவணைத்து ஆறுதல் சொன்ன ஸ்மிருதி இரானி

Published on 17/10/2022 | Edited on 18/10/2022

 

nn

 

ஒவ்வொரு ஆண்டும் அக்.11 தேதி  சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சிறுமிகள், பெண்கள் பங்கேற்று சிறு வயதில் வாழ்வில் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

 

அப்போது பீஹார் மாநிலத்தை சேர்ந்த குலாப்ஷா பர்வீன் என்ற இளம்பெண் கூறும்பொழுது ''பிஹார் மாநிலம் மசார்கி கிராமத்தை சேர்ந்தவள் நான். எனக்கு 15 வயதானபோது 55 வயதுடைய நபருக்கு என்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி 10 பிள்ளைகள் இருந்தனர். என் கணவரின் சகோதரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினர். எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பி காப்பகம் ஒன்றில் தஞ்சம் புகுந்தேன். அங்கு எனது பள்ளிப் படிப்பை தொடர்ந்தேன். ஆனால் எனக்கு 18 வயதானபோது காப்பகத்தின் நிர்வாகிகள் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

 

வீட்டுக்கு வந்தால் சொந்த குடும்பத்தினரே என்னை அவதூறாக பேசினர். அவமரியாதை செய்தனர். கணவர் வீட்டுக்கு போ என்று துரத்தினர். வேறு வழியில்லாமல் வீட்டில் இருந்து மீண்டும் வெளியேறி ஐ.நா.அமைப்பின் யூனிசெப் நிர்வாகிகளை தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு ஆதரவு கொடுத்து கணினி பயிற்சி, கணக்கியல் உள்ளிட்ட பல தொழிற்கல்வி பாடங்களை கற்பித்தனர். எனது பெயரை தாரா சாண்டில்யா என்று மாற்றிக்கொண்டேன். யூனிசெப் செய்த உதவியால் மிகப்பெரிய பேக்கரி நிறுவனத்தில் பணியாற்றினேன். தற்போது புதிதாக போக்குவரத்து நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறேன்'' என கண்ணீர் மல்க கூறினார்.

 

இளம்பெண் தனது  வாழ்க்கையை மேடையில் விவரித்தபோது  நா தழுதழுத்தார். இதைப் பார்த்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஓடோடிச் சென்று அந்தப் பெண்ணை கட்டியணைத்து கொண்டார். அவருக்கு ஆறுதல் கூறி அவரை தேற்றினார். இளம்பெண் பர்வீனை அமைச்சர் ஸ்மிருதி இரானி கட்டியணைத்து தேற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்