Skip to main content

“காங்கிரசிற்கு வாக்களித்தால் பா.ஜ.க வெற்றி பெறும்” - எச்சரிக்கும் மம்தா பானர்ஜி!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Mamata Banerjee warns BJP will win if vote for Congress

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கடந்த 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக கடந்த 26ஆம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 

இதனையடுத்து, மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக வரும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலையொட்டி மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், மால்டா மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், “மால்டாவில் எந்த மக்களவை தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெற்றதில்லை. இந்த நேரத்தில், நீங்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும், ஏனெனில் இந்த இடங்களில் காங்கிரஸுக்கும், இடதுசாரிகளுக்கும் வாக்களித்தால் பாஜக வெற்றி பெறும். இந்த இரண்டு கட்சிகளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளன. திரிணாமுல் தொகுதிகளில் வெற்றி பெறாமல் பாஜக ஆட்சிக்கு வந்தால், அது சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி யை அறிமுகப்படுத்தி உங்களைத் தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவார்கள். 

வங்காளத்தில் காங்கிரஸால் வெற்றி பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமது வாக்குகளைக் குறைக்கவே இங்கு போட்டியிடுகிறார்கள். காங்கிரஸுக்கு எந்த அளவுக்கு அதிக வாக்குகள் கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு பா.ஜ.க பலம் பெறும். பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்றால் காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள். காங்கிரஸுக்கு சட்டசபையில் ஒரு இடம் இல்லை என்றாலும், அக்கட்சிக்கு இரண்டு சீட்கள் வழங்கி, சி.பி.எம் உடன் கைகோர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். இருப்பினும், அவர்கள் செவிசாய்க்கவில்லை. இடதுசாரிகளுடன் கூட்டணியை உருவாக்க முன்வந்தனர். நான் ஒருபோதும் சி.பி.எம் முன் சரணடைய மாட்டேன். அதே சமயம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஆட்சி அமைப்பதில் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். ஆனால் நீங்கள் மோடியை அவரது இருக்கையில் இருந்து வீழ்த்துவீர்கள் என்று உறுதியளிக்க வேண்டும்” எனக் கூறினார். 

சார்ந்த செய்திகள்