Skip to main content

நாடு தழுவிய சுகாதார பணியாளர்களின் போராட்டத்தை அறிவித்த இந்திய மருத்துவ கூட்டமைப்பு!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

IMA PRESIEDNT

 

கரோனாவால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா இரண்டாவது அலையில் மட்டும் 719 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கூறியுள்ளது. இதற்கிடையே பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா சிகிச்சையில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

 

இதனைக் கண்டித்து இந்திய மருத்துவக் கூட்டமைப்பு வரும் 18ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் ஜே.ஏ. ஜெயலால், "சுகாதார வல்லுநர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக, 'காப்பாற்றுபவரைக் காப்பாற்றுங்கள்' என்ற கோஷத்தோடு வரும் 18ஆம் தேதி நடைபெறும் சுகாதாரப் பணியாளர்களின் போராட்டத்தை இந்திய மருத்துவக் கூட்டமைப்பு தலைமை தாங்கி நடத்தும். எந்த மருத்துவமனைகளும் மூடப்படாது. கருப்பு பேட்ஜ், கருப்பு முகமூடி அல்லது கருப்பு சட்டை அணிந்து மருத்துவர்கள் பணியாற்றுவார்கள்" என கூறியுள்ளார்.

 

மேலும் அவர், "பீகார், மேற்கு வங்கம், அசாம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். தொற்றுநோயின்போது பணிபுரியும் முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பு. சுகாதாரப் பணியாளர்களைத் தாக்குபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என அரசிடம் கோருகிறோம். மேலும், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் கட்டாய பாதுகாப்பு அமைப்பு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்