Skip to main content

"மாநில முதலமைச்சர்களுடன் விரைவில் ஆலோசனை"- பிரதமர் நரேந்திர மோடி!

Published on 09/01/2022 | Edited on 09/01/2022

 

"Consultation with state chief ministers soon" - Prime Minister Narendra Modi!

 

இந்தியாவில் கரோனா மற்றும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதே சமயம், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். 

 

இந்த நிலையில், இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (09/01/2022) மாலை 04.30 மணியளவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் காணொளி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய உள்துறை செயலாளர் அஜய்பல்லா மற்றும் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் காணொளி மூலமாகக் கலந்து கொண்டனர். 

 

ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, "போர்க்கால அடிப்படையில் சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். அதிக கரோனா பாதிப்பு பதிவாகும் கிளஸ்டர்களில் தீவிர கட்டுப்பாடு மற்றும் தீவிர கண்காணிப்பு தொடர வேண்டும். அதிகமான கரோனா பாதிப்பு பதிவாகும் மாநிலங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட வேண்டும். 

 

கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக, விவாதிக்க மாநில முதலமைச்சர்களுடன் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். கரோனா அல்லாத சுகாதார சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மாவட்ட அளவில் போதிய சுகாதார உள்கட்டமைப்பை உறுதி செய்யுங்கள். அவசரகால கரோனா நிதி உள்ளிட்ட உதவிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்