Skip to main content

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முடிவுகள் - முழு விவரம்    

Published on 04/03/2018 | Edited on 04/03/2018

நாகலாந்து, திரிபுரா மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. மார்ச் 3ஆம் தேதி காலை தொடங்கி இரவு முடிந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் :

 

modi amitshah



திரிபுராவில் மொத்தம் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 60. இதில், சாரிலாம்  தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரமேந்திர நாராயண் தேவ்வர்மா உயிரிழந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 59 தொகுதிகளில், பாஜக  35 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி 8 இடங்களிலும் வென்றுள்ளன. 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2013 தேர்தலில் 49 தொகுதிகளில் வென்று மாணிக் சர்க்கார் தலைமையிலான ஆட்சியை அமைத்திருந்தது. கடந்த தேர்தலில் 10 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இங்கு பாஜக 43% வாக்குகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 42.7% வாக்குகளையும் காங்கிரஸ் 1.8% வாக்குகளையும் பெற்றுள்ளன.

 

manik sarkar



கடந்த முறை முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் தான் போட்டியிட்ட தண்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அமையப்போகும் பாஜக ஆட்சியில் முதல்வராக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் பிப்லப் தேவ், பாணாமலிபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமலிருந்த பாஜக இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதும், கடந்த முறை 10 உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் இந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாமல் இருப்பதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளில் ஒரு தொகுதியின் வாக்குப்பதிவு வேட்பாளர் கொல்லப்பட்டதால் நிறுத்திவைக்கப்பட்டது. 59 தொகுதிகளில் காங்கிரஸ் 21 தொகுதிகளையும் தேசிய மக்கள் கட்சி 19 தொகுதிகளையும் பாஜக 2 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியின் முதல்வரான முகுல் சங்மா தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். அதிக தொகுதிகளில் வென்றிருந்தாலும் காங்கிரஸுக்கு ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை இல்லையென்பதால்  தேசிய மக்கள் கட்சி பாஜகவுடனும் சிறிய கட்சிகளுடனும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயலும். காங்கிரஸும் ஆட்சியமைப்பதை நோக்கி தீவிரமாக நகர்ந்து வருகிறது.

 

mukul sangma

                                                                        முகுல் சங்மா


நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் நாகா மக்கள் முன்னணி 27 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 11 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி 16 இடங்களிலும் வென்றுள்ளன. இங்கு எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறாத காரணத்தால் இன்னும் சில நாட்களில் யார் யாருடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது தெரிய வரும். கடந்த ஆட்சியின் முதல்வர் டி.ஆர்.ஜிலியாங் தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த மூன்று வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகளின் படி, வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை இல்லாத பாஜக, தன் கால்களைப் வைத்துள்ளது என்பது தெரிகிறது. 20 வருடங்கள் எளிமையான நேர்மையான முதல்வரென அனைவராலும் பாராட்டப்பட்ட மாணிக் சர்க்கார் மீண்டும் முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.     

 

 

        

சார்ந்த செய்திகள்