Skip to main content

“அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” - கைது குறித்து சந்திரபாபு நாயுடு

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Chandrababu Naidu on Arrest as Political vendetta

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 241 கோடி முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற மாநில சிஐடி காவல்துறையினர் அவரிடம் கைது செய்வதற்கான கைது வாரண்ட்டை வழங்கினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, நந்தியாலா பகுதியில் இருந்து விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு பதிவான இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சந்திரபாபு நாயுடுவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். தமிழகத்தின் வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இரு மாநில எல்லைகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் தமிழகம் திரும்புவதற்கு பேருந்துகள் இன்றி தவித்து வருகின்றனர். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் திருப்பதியில் உள்ள சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

 

இந்நிலையில் தனது கைது குறித்து சந்திரபாபு நாயுடு தெரிவிக்கையில், “என்னை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இது வழக்கை திசை திருப்பும் செயல். சட்டப்படி வழக்கு விசாரணையை சந்திப்பேன் என் மீது சுமத்தப்பட்ட ஊழலில் உண்மையில்லை. தெலுங்கு தேசம் கட்சியினர் யாரும் பதற்றமடைய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவரது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “கடந்த 45 ஆண்டுகளாகத் தெலுங்கு மக்களுக்கு தன்னலமின்றி சேவை செய்து வருகிறேன். தெலுங்கு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக என் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். தெலுங்கு மக்களுக்கும், எனது ஆந்திரப் பிரதேசத்திற்கும், எனது தாய்நாட்டிற்கும் சேவை செய்வதை பூமியில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்