Skip to main content

’தமிழகம் கல்வியில் உயர்ந்து நிற்கிறது’- பன்வாரிலால் புரோகித் பேச்சு

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
puvana

 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்தவர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்தார்.   அவரை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்களும் கோயில் குருக்களும் பூர்ணகும்பமரிதை கொடுத்துவரவேற்றனர். கோயிலுக்குள் மங்கள வாத்தியம் முழங்க ஆளுனர் கோயிலுக்குள் சென்று சுவாமி, அம்பாள் சன்னதியில் அரைமணி நேரம் சுவாமி தரிசனம்செய்தார். கும்பகோணத்திலிருந்து திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்று அங்கு பாமா சுப்பிரமணியன் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு திப்பிராஜபுரத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி மேற்கொண்ட நான்கு பேருக்கு பாராட்டும், தலா ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான ரொக்க சான்றும், சுதந்திரபோராட்ட தியாகி செண்பகராமன்பிள்ளையின் வெங்கலச்சிலையை திறந்து வைத்தார்.


மேலும், திப்பிராஜபுரத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமராக்களை இயக்கிவைத்தும், துப்புரவு பணிக்காக இரண்டுகுப்பை அள்ளும் வண்டிகளையும், பொதுமக்களுக்கு குப்பை கூடைகளையும் வழங்கினார்.

 

அப்போது நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசுகையில்,  " நான் இந்தியாவில் மகாராஷ்டிரா, அசாம், மேகாலயா உள்ளிட்ட இடங்களில் வேலை பார்த்துள்ளேன். தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் ஆளுநராக உள்ளேன். இதில் தமிழகத்தில் இதுவரை 25 மாவட்டங்களுக்கு சென்று வந்துள்ளேன்.

 

என்னுடைய பயண அனுபவத்தில்  நான் பார்க்கும் போது, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளதை கண்கூடாக  பார்க்கமுடிகிறது.

 

தூய்மை இந்தியா திட்டம் இந்தியாவில் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கி, சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். ஒவ்வொருவரும் தூய்மைக்காக வாரத்துக்கு இரண்டு மணி நேரம் வீதமும், வருடத்துக்கு 100 மணி நேரமும் ஒதுக்கி நாட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள உறுதி ஏற்க வேண்டும்".  என்றார்.

 

இவ்விழாவில், மயிலாடுதுறை எம்பி ஆர்.கே.பாரதிமோகன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, கும்பகோணம் உதவி ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார்,  முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரின் முதன்மை செயலாளர்  ஸ்ரீதரன், தமிழக ஆளுநரின் முதன்மை செயலாளர் ராஜகோபால்,  பாமா சுப்பிரமணியன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் எஸ். கார்த்திகேயன், ராம்பிரசாத், கிராமிய  திட்ட ஆலோசகர் கீதாராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்