Skip to main content

பெண் ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... சக ஆசிரியர் மீது பரபரப்புப் புகார்; சி.இ.ஓ. விசாரணை!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

gggg

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

 

இப்பள்ளியில் வினோத்குமார் என்பவர் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர், உடன் பணியாற்றி வரும் பெண் ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியில் ஆபாசமாக பேசுவதாகவும், சிலரிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு மொட்டை பெட்டிஷன்கள் சென்றன. 

 

ஆனாலும், இந்தப் புகார் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இதற்கிடையே, வினோத்குமாரால் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் ஒருவர், கடந்த மார்ச் 24ஆம் தேதி, தேன்கனிக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலருக்கு நேரடியாக எழுத்து மூலமாக புகார் அளித்திருந்தார். மார்ச் 24ஆம் தேதி மாலை முதல் கரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பள்ளிகள் மூடப்பட்டன. அத்துடன் இந்தப் புகாரும் கிடப்பில் போடப்பட்டது.

 

இப்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணிகளுக்காக ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிப் பணிக்குத் திரும்பினர். ஆசிரியர் வினோத்குமார் மீண்டும் சில பெண் ஆசிரியர்களிடம் பாலியல் ரீதியில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. 

 

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் வினோத்குமார் மீது கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர் ஜோதி சந்திராவுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். 

 

இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்பு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அங்கமுத்து தலைமையில் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்ற அந்தேவனப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் அரவிந்த், பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர் வினோத்குமார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகிரங்கமாகக் கூறினார். அதற்குப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அங்கமுத்து, பள்ளி நிர்வாகத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் தலையிட உரிமை இல்லை எனக்கூறி அவரை வெளியே செல்லும்படி கூறினார். இதனால் அக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 

 

இது ஒருபுறம் இருக்க, கூட்டத்திற்கு வந்திருந்த பெற்றோர்களும், ஆசிரியர் வினோத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதோடு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரையும் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்றும் கூறி, திடீரென்று பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்தும், ஆசிரியர் வினோத்குமார் மீதான புகார் குறித்தும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தி மற்றும் எட்டாம் வகுப்பு ஆசிரியர்களிடமும் நேரடியாக விசாரணை நடத்தினார். 

 

இச்சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்