Skip to main content

பெகாசஸ் விவகாரம்: நேரடியாக வழக்கு தொடுக்க முடிவு!  திருமாவளவன் அறிக்கை!!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

Pegasus affair: Decide to sue directly! Thirumavalavan

 

பெகாசஸ் விவகாரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க அட்டார்னி ஜெனரல் அனுமதி மறுப்பு, நேரடியாக வழக்கு தொடுக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவெடுத்துள்ளதாகக் கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெகாசஸ் உளவு செயலி மூலம் ஒட்டுக்கேட்கும் விவகாரத்தில் நீதிக்குப் புறம்பாகச் செயல்பட்ட இந்திய உள்துறையின் இந்நாள், முன்னாள் செயலாளர்கள், பெகாசஸ் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பதற்கு அனுமதி கேட்டு  இந்திய அட்டர்னி ஜெனரல் அவர்களுக்கு 13.08.2021 அன்று கடிதம் எழுதியிருந்தேன். அதற்குப் பதிலளித்துள்ள அட்டர்னி ஜெனரல் அவர்கள், 'இந்தப் பிரச்சனை நீதிமன்ற விசாரணையில் இருப்பதாலும், குற்றம் நடந்திருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க முடியாததாலும் இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பதற்கு அனுமதி வழங்க இயலாது'  என்று தெரிவித்திருக்கிறார்.

 

அட்டர்னி ஜெனரல் அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்; “பெகாசஸ் குழுமத்துக்கு எதிராகவும் அதன் இயக்குநர்கள், இந்திய உள்துறையின் தற்போதைய செயலாளர் அஜய் பல்லா, முன்னாள் செயலாளர் ராஜிவ் கௌபா ஆகியோருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு சட்டம், 1971-ன் பிரிவு, 15-ன் கீழ் வழக்குத் தொடுக்க அனுமதி கேட்டு தாங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றேன்.

 

13.08.2021 தேதியிட்ட உங்கள் கடிதத்தின் உள்ளடக்கங்களையும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும் நான் கவனமாக ஆராய்ந்தேன். நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971ன் கீழ் எனது ஒப்புதலுக்காக உங்கள் கடிதத்தில் சில குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளீர்கள்.

 

இந்திய அரசு பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறதா அவ்வாறெனில் யாருக்கு எதிராகப் பயன்படுத்தியது என்பது விவாதத்துக்குரியதாகவும், தற்போது உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் வெளிப்படையாகப் பேசப்பட முடியாததாகவும் ( sub-judice) உள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் தீர்ப்பளிக்காத நிலையில், நீதிமன்ற அவமதிப்பு சட்டம், 1971-ன் பிரிவு, 15-ன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பதற்கு நான் ஒப்புதல் அளிப்பது பொருத்தமற்றது. எனவே நீதிமன்ற அவமதிப்பு சட்டம், 1971-ன் பிரிவு, 15-ன் கீழ் வழக்குத் தொடுக்க நான் அனுமதி மறுக்கிறேன்” என்று அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து மூத்த வழக்கறிஞர்களோடு கலந்தாலோசித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்திருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்