Skip to main content

போக்சோ வழக்கில் முதல் தூக்கு! ம.பி. ஐகோர்ட் அதிரடி!

Published on 04/02/2019 | Edited on 04/02/2019

இந்தியாவில் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்கள் பரவலாக அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக் கண்டித்து மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மத்திய அரசு போக்சோ எனப்படும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் மாறுதல்களைக் கொண்டுவந்தது. 
 

child

 

 

 

அதன்படி, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை கொடுப்பவர்களுக்கு மரண தண்டனையும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தால் ஆயுள் தண்டனையும் வழங்கப்படும் என அந்த சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டத் திருத்தத்தை பல தரப்பினரும் ஆதரிவித்து வருகின்றனர். இதனால், பாலியல் வன்கொடுமைகள் கணிசமாக குறைந்துவிடவில்லை என்றாலும், அதில் ஈடுபட முயல்வோர் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
 

 

இந்நிலையில், இந்தச் சட்டத்தின் கீழ் முதல்முறையாக ஒருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சிங், 27. இவர் சென்ற ஆண்டு ஜூன், 20ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை காட்டுக்குள் கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் தப்பினார். 

 

 

இதையடுத்து கைது செய்யப்பட்ட மகேந்திர சிங் தொடர்பான வழக்கு, சாத்னா விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மகேந்திர சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மத்தியப் பிரதேசம் மாநில ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அங்கும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மகேந்திர சிங்கிற்கு வருகிற மார்ச் 02ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான கறுப்பு வாரண்டும் வழங்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் மூலம் இந்தியாவில் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.  
 

சார்ந்த செய்திகள்