Skip to main content

படிக்காதவன் சோறு போடுகிறான்; படித்தவன் நாட்டை கூறு போடுகிறான் - சீமான் பேச்சு!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

ik



சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடப்பு அரசியல் தொடர்பாக பேசினார். அவர் பேசியதாவது "கடந்த 50 ஆண்டுகளாக ஓட்டை மாற்றி மாற்றி போட்டு இந்த தமிழகம் பாழ்ப்பட்டு போய் கிடக்கிறது. அதிமுக, திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மாற்றி வாக்களிக்க வேண்டும் என்றாலும் பழக்க தோஷம் அவர்களை விடுவதில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு அம்மா கன்னியாகுமரியில் இருந்து என்னிடம் தொலைபேசியில் பேசினார். "அப்பா, உனக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எதற்கு ஒரு வாக்கை வீணடிக்க வேண்டும் என்று இலைக்குப் போட்டுவிட்டேன்" என்று கூறினார்கள். தான் செய்தது தவறு என்பதை அவர்களுக்கு காலம் புரிய வைக்கும். மாறி மாறி இந்த தமிழகத்தை திமுக, அதிமுக சீரழித்து வருகிறார்கள். இன்னமும் அது தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆண்ட பெருந்தலைவர் காமராஜர் செய்த சாதனைகளை, இத்தனை ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அதிமுக, திமுக கட்சிகள் செய்யவில்லை. கிட்டதட்ட 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி மடை மாற்றம் செய்து வருகிறார்கள். இலவசம் தருவதாகக் கூறி மதி மயக்குகிறார்கள். 

 

இவர்கள் பல துணைகளைக் கட்டினார்களே தவிர, ஒரு அணையைக் கூட கட்டவில்லை. ஒரு துணையும் கட்டாத அவர், பல அணைகளைக் கட்டி நாட்டை வளமாக்கினார். ராஜாஜி நிதியில்லை என்று கூறி மூடிய 6000 பள்ளிகளைத் திறந்ததோடு, மேலும் 16 ஆயிரம் பள்ளிகளைத் திறந்து குழந்தைகளுக்கு கல்வியைப் போதித்தவர் படிக்காத மாமேதை காமராஜர். அவரின் சாதனைகளை யாராவது மறந்துவிட முடியுமா, இல்லை மறுத்து பேசிவிட முடியுமா?  நமக்கு இரண்டு கண் போனாலும், அவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்பதுதான் மானுட சிந்தனை. அப்படித்தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் நாங்கள் எப்படி நினைக்கவில்லை. எங்கள் தலைவர் அப்படி நினைக்கவில்லை. எங்களை உருவாக்கிய மேதகு பிரபாகரன் அப்படி நினைக்கவில்லை, எங்களை அவ்வாறு உருவாக்கவும் இல்லை. அவர் என்ன நினைத்தார், நான் வீழ்ந்தாலும் சரி, என் இனம் எழ வேண்டும் என்று விரும்பினார். அதே கோட்பாட்டில் அவருடைய பிள்ளைகள் நாங்களும் இருக்கின்றோம். 

 

பெருந்தலைவர் படிக்கவில்லை, படிக்க விடவில்லை. ஆனால் தனக்கு கிடைக்காத கல்வி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று அவர் எண்ணவில்லை. தனக்கு கிடைக்காத கல்வி தன் தேசத்தில் உள்ள பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். படிக்க வைத்தால் நம் பிள்ளைகள் நாட்டை முன்னேற்றிவிடுவார்கள் என்று அவர் நம்பினார். ஆனால் தற்போது இருப்பவர்கள் எல்லாம் படித்தும், கொள்ளை அடிப்பது எப்படி என்று சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். படிக்காதவன் நாட்டுக்கு சோறு போடுகிறான், படித்தவர்கள் நாட்டை கூறுபோடுகிறார்கள். ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை என்றால் துள்ளிக் குதிக்கிறார்கள். எப்படி ஆடு மாடு மேய்க்கச் சொல்கிறீர்கள் என்று. எல்லாரும் கலெக்டராக ஆக முடியும். கலெக்டருக்கும் நாமதான் கஞ்சி ஊத்த வேண்டும். நாட்டின் பிரதமர் ஆனாலும், இல்லை அமெரிக்க அதிபர் ஆனாலும், கஞ்சி விவசாயிதான் தர முடியும். பல பேர், சீமானுக்கு வாக்களித்தால் பிஜேபி வந்துவிடும் என்கிறார்கள். எனக்கு வாக்களித்தால் பிஜேபி எப்படி வரும். நான்தான் வெற்றிபெறுவேன். எனவே வெற்றிக்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம்" என்றார்.