Skip to main content

இங்கிலாந்து தொடரில் ஏன் தோற்றது இந்தியா? - ஐந்து காரணங்கள்

Published on 11/09/2018 | Edited on 11/09/2018

இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் என்றதுமே, அனைவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது டெஸ்ட் கிரிக்கெட் தொடர்தான். மற்ற ஃபார்மேட்டுகளில் இந்திய அணி மிரட்டலாக இருந்தாலும், சிவப்பு பந்தில் என்ன சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புதான் அதற்குக் காரணம். 
 

India

 

 

 

எட்க்பாஸ்டனில் தொடங்கிய டெஸ்ட் தொடர், ஓவல் மைதானத்தில் முடியவுள்ளது. கடைசி நாளான இன்று தோல்வியிலிருந்து தப்பித்து, போட்டியை ட்ராவாக்க இந்திய அணி போராடிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, 1 - 3 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ள நிலையில், கடைசி போட்டியில் தோற்காமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி. அணித் தேர்வில் நடந்த குழப்பங்களேஇதற்குக் காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், இந்திய அணி ஏன் இந்தத் தொடரைத் தோற்றது என்பதற்கான ஐந்து காரணங்களை இங்கே குறிப்பிடுகிறோம். 

முதல் டெஸ்டில் புஜாரா இல்லாதது 
 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதன் கோட்டையான எட்க்பாஸ்டன் மைதானத்தில் தனது ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியுடன் விளையாடியது. வெறும் 31 ரன்களில் இந்தப் போட்டியில் தோற்றதற்குக் காரணமாக சொல்லப்பட்டது, புஜாராவை அணியில் சேர்க்காததுதான். களத்தில் அதிக பந்துகளை எதிர்கொள்ளாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த நிலையில், புஜாரா அதைக் கட்டுப்படுத்தியிருக்கக் கூடும். 
 

 

 

இரண்டாவது டெஸ்டில் குல்தீப் வீண்
 

இங்கிலாந்து பேட்ஸ்மென்களை கலங்கடித்த குல்தீப், டெஸ்ட் தொடரில் ஜொலிக்கவில்லை. அதுவும் மேகமூட்டமான சூழலில் இருந்த லார்ட்ஸ் மைதானத்தில் குல்தீப்பை அணியில் சேர்த்தது எந்தவித பயனும் இல்லாமல் போனது. கூடுதலாக வேகப்பந்து வீச்சாளரைக் களமிறக்கி இருக்கலாம். 
 

காயம்பட்ட அஸ்வின்
 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ரொம்ப காலமாக சிறப்பாக பந்துவீசி வரும் அஸ்வின், காயத்துடன் பாதி உடல்தகுதியில் நான்காவது டெஸ்டில் களமிறக்கப்பட்டார். இந்திய ஸ்பின் அட்டாக் என்பது வலுவான ஒன்று என்றாலும், காயம்பட்ட அஸ்வினால் அதீத பலத்தைக் காட்ட முடியவில்லை. 
 

லாஜிக்கில்லா தவான் மேஜிக் 
 

இந்திய அணியின் ஓப்பனிங் காம்போ அதிகமாக திணறிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து அணி அசால்ட்டாக நூறு ரன்களைக் கடந்தால், 50 ரன்களைக் கடந்தாலே அதைக் கொண்டாடும் மனநிலைக்கு இந்திய அணி வந்துவிட்டது. அதிலும், தவான் மேஜிக் சுத்தமாக எடுபடவில்லை. மாற்று வீரர் இல்லாத சூழலை இந்தியா சமாளிக்கத் தவறிவிட்டது. 
 

 

 

ஆறாவது பேட்ஸ்மேன் யார்?
 

இந்தத் தொடர் தொடங்கியதில் இருந்தே ஆறாவது பேட்ஸ்மேனுக்காக இடம் குழப்பத்திலேயே இருந்தது. விக்கெட் கீப்பர், ஆல்ரவுண்டர் என மாறிமாறி அந்த இடத்தை ஆக்கிரமிக்க, நிலையான ஆட்டம் தர ஒருவர் கூட அங்கில்லை. இங்கிலாந்தில் பட்லர், சாம் குர்ரனைப் போல விக்கெட்டைத் தாக்குப்பிடிக்க இந்திய வீரர்கள் தவறிவிட்டனர். அனுமா விஹாரி ஓரளவுக்கு நம்பிக்கையளித்தாலும், அதற்குள் தொடரே முடிந்துவிட்டதே.