Skip to main content

பாஜகவிற்கு 8 முறை வாக்களித்த இளைஞர்; வெளியான அதிர்ச்சி வீடியோ

Published on 19/05/2024 | Edited on 19/05/2024
 video of a youth voting for BJP 8 times in Uttar Pradesh has surfaced

நாட்டின் 18 வது மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 14 தொகுதிகளுக்கும் வரும் 20 ஆம் தேதி 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் பாஜக வேட்பாளருக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த 4 ஆம் கட்ட தேர்தலின் போது ஃபரூக்காபாத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அந்த வீடியோவில், ஃபரூக்காபாத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முகேஷ் ராஜ்புத் என்பவருக்கு அந்த இளைஞர் 8 முறை வாக்களிக்கிறார். தான் 8 முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பதை அந்த இளைஞரே வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில் தேர்தல் ஆணையத்தை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “இது தவறு என்று இந்திய தேர்தல் ஆணையம் கருதினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

சார்ந்த செய்திகள்