Skip to main content

"நகர்ப்புற மக்கள் வாக்களிக்கத் தவறிவிட்டனர் " - ராதாகிருஷ்ணன் ஆதங்கம் !

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Urban people have failed to vote says Radhakrishnan

நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்புடன், அதேநேரம் அமைதியாக வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் இயந்திரங்களை பாதுகாப்பு அறைகளில் வைக்கும் பணியை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 100-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜூன் 4-ம் தேதி வரை தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்கும். கட்டுப்பாட்டு அறையை திறக்க இரண்டு  சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்படும். ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை விட இந்த ஆண்டு சென்னையில் 4% வாக்குப் பதிவு குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 10-ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது" என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்