Skip to main content

திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Strict restrictions on open-air construction work

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியது. கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வந்தன. அத்தோடு தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) முதல் கத்தரி வெயில் தொடங்கியது. மேலும் 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்தக் கத்தரி வெயில் நீடிக்க உள்ளது. இத்தகைய சூழலில் கட்டட பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அதிக வெப்ப அலை காரணமாக ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளன. 

Strict restrictions on open-air construction work

இந்நிலையில் அதிக வெப்பம் காரணமாக காலை 10 முதல் மாலை 4 வரை அனைத்து வகை திறந்தவெளி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, எவ்வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெயிலில் தொழிலாளர் உடல்நலன் பாதிக்கப்படுவதை தடுக்க தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதன் மூலம் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கட்டுமான தொழிலாளர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மே மாதம் இறுதி வரை திறந்தவெளி கட்டுமானப் பணி நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குநர் ஆணையிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்