Skip to main content

பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பலத்தை நிறுவ வேண்டும் -திருமாவளவன்

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பலத்தை நிறுவ வேண்டும் -திருமாவளவன்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பலத்தை நிறுவ வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அதிமுகவைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தமிழகப் பொறுப்பு ஆளுநரைச் சந்தித்து எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாகத் தற்போதுள்ள அதிமுக அரசு போதுமான பலத்தை இழந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. 

எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்றத்தைக் கூட்டித் தனது ஆட்சிக்குள்ள பலத்தை நிரூபிக்க வேண்டும். இதைத் தமிழகப் பொறுப்பு ஆளுநரும் வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

நேற்று நடைபெற்ற இரு அணிகளின் இணைப்பு பாஜகவின் அழுத்தத்தால் தான் நடந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே ஆகும். அதிமுகவில் நிலவும் குழப்பத்தைப் பயன்படுத்தி பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கின்றன. அதிமுக பலவீனமடைவது தமிழக ஆட்சியின் உறுதிபாட்டுக்கு ஊறுவிளைவிப்பது மட்டுமின்றி தமிழ்நாட்டில் சாதிய-மதவாத சக்திகள் வலுப்பெறவும் வழிவகுத்து விடும் என்பதை யாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். 

இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டதால் தமிழ்நாட்டில் வகுப்புவாத ஆபத்து அதிகரித்துள்ளது. இதை கவனத்தில் கொண்டு தமிழகத்தைக் காப்பற்ற மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்களின் போதுமான ஆதரவு இல்லாத நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தனது பலத்தை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

சார்ந்த செய்திகள்