Skip to main content

பட்டப்பகலில் பயங்கரம்; மனைவியை வெட்டிவிட்டு கழுத்தை அறுத்துக் கொண்ட கணவன்

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
husband who incident his wife throat

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதி, அழகரையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பெருமாள்(45). இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி திலகம்(40). திலகம் கரூர் அரசு மருத்துவமனையில் சமையல் கூடத்தில்  ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் என ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று பணி முடிந்து குளித்தலை வந்த திலகம் மாலை சுமார் ஆறு மணியளவில் குளித்தலை சுங்க கேட் பகுதியில் திருச்சி கரூர் மெயின் ரோட்டில் உள்ள  மாணிக்கம் என்பவரது  பழக்கடையில் பழங்கள் வாங்கிக் கொண்டு இருந்துள்ளார். அவரை கண்காணித்த கணவர் பெருமாள் பழக்கடைக்கு சென்று பழங்கள் வாங்கிக் கொண்டிருந்த திலகத்திடம் தகராறு செய்துள்ளார். இதனிடையே பெருமாள் இரண்டு வீச்சு அரிவாள்களை மறைத்து வைத்து இருந்துள்ளார்.

தகராறு முற்ற ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெருமாள் மது போதையில்  தான் வைத்திருந்த வீச்சு அரிவாளை எடுத்து சரமாரியாக திலகத்தை வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் திலகம் சரிந்தார். இதையடுத்து பெருமாள் தான் கையில் வைத்திருந்த மற்றொரு அரிவாளை எடுத்து தனக்குத்தானே  கழுத்தை அறுத்துக் கொண்டார்.

தகவலின் பேரில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருவரும் உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன. சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி கரூர் மெயின் ரோட்டில் பட்டப்பகலில் நடந்த சம்பவம் குளித்தலையில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்

சார்ந்த செய்திகள்