Skip to main content

“தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது” -  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
High Court says Court will not entertain untouchability 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளப்பொம்மன் கிராமத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன், முத்தாலம்மன், காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளது. இந்தக் கோவில்களில் மே 19 ஆம் தேதி (19.05.2024) திருவிழா நடத்த இக்கோயில்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தகையச் சூழலில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 80க்கு மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் திருவிழாவில் பங்கேற்கவும், கழுமரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அனுமதிப்பதில்லை. எனவே வரும்19 ஆம் தேதி நடக்க இருக்கும் திருவிழாவில் பட்டியலின மக்கள் வழிபடும் வகையில் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

High Court says Court will not entertain untouchability 

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வேல் முருகன் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (16.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதிடுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக வேடச்சந்தூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அனைத்து தரப்பு நிர்வாகிகளும் பங்கேற்றனர். கோவில் திருவிழாவில் பட்டியலின மக்களோடு அனைத்து சமுதாய மக்களும் சேர்ந்து திருவிழாவைக் கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், “சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் சில பகுதிகளில் தீண்டாமை நடைபெறுவதும், பாகுபாடு பார்ப்பதும் ஏற்புடையது அல்ல. இந்திய அரசியலமைப்பினை பாதுகாக்க நீதிமன்றம் உள்ளது. தற்போதும் சில இடங்களில் தீண்டாமை நடைப்பெறுதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. ஒரு மனிதன் சக மனிதனிடம் பாகுபாடு பார்ப்பது ஏற்புடையது அல்ல. திருவிழா கொண்டாடுவதில் எந்த பாகுபாடும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். திருவிழாவின்போது எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்னையும் வருவாய் துறையினரும், காவல் துறையினரும் பார்த்துக்கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்