Skip to main content

13 எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாடி கட்சியில் சேரவுள்ளனர் - சரத் பவார் தகவல்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

SHARATH PAWAR

 

உத்தரப்பிரதேசம்,கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அந்தந்த மாநிலங்களில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல், மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

 

இந்தநிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உத்தரப்பிரதேசத்தில், சமாஜ்வாடியுடனும், பிற சிறிய கட்சிகளுடனும் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளோம். உத்தரபிரதேச மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மாநிலத்தில் நிச்சயம் மாற்றத்தைக் காண்போம். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் மக்கள் வகுப்புவாத ரீதியில் பிளவுபடுத்தப்பட்டு வருகிறார்கள்" என கூறியுள்ளார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது உத்தரப்பிரதேசத்தில் பாஜக அமைச்சர் சுவாமி பிரசாத் மௌரியா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளது குறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த சரத் பவார், 13 எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாடி கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்