Skip to main content

‘நோட்டாவுக்கு வாக்களியுங்கள்’ - தீவிர பிரச்சாரத்தில் காங்கிரஸ்!

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
 Congress in serious campaign on Vote for NOTA in indore

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய இந்த தேர்தல், ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே, மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் மே 13ஆம் தேதி அன்று 96 தொகுதிகளுக்கு நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

இற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இதற்கிடையில், குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் நிராகரிக்கப்பட்டதாலும், பகுஜன் சமான் கட்சி உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் முதற்கொண்டு அனைவரும் தங்களுடைய வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டதாலும், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார். இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்தது. மேலும், இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

அதே போல், மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7ல் தேர்தல் முடிந்த நிலையில், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. நான்காம் கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில், இந்தூர் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் கண்டி பாம், வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளில் வாபஸ் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால், இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளரும் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர் இல்லாமல் இந்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. அதில், காங்கிரஸுக்கு வாக்களிக்க விரும்புபவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு, காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69 சதவீதம் பதிவான இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு 5,045 வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்