Skip to main content

விடுதலைப் புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை; மத்திய அரசு உத்தரவு!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Central government order for banned for another 5 years

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் விடுதலைப் புலிகள் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு இந்தத் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், விடுதலை புலிகள் மீதான தடையைத் தற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் பாதகமான செயற்பாடுகளில் விடுதலைப் புலிகள் இன்னமும் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுகிறது. கடந்த மே, 2009 இல் இலங்கையில் இராணுவத் தோல்விக்குப் பிறகும், விடுதலைப் புலிகள் 'ஈழம்' என்ற கருத்தை கைவிடவில்லை. மேலும் நிதி திரட்டுதல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் 'ஈழம்' பிரச்சினையை நோக்கி இரகசியமாக செயல்பட்டு வருகின்றனர். எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அல்லது அங்கத்தவர்கள் சிதறிய செயற்பாட்டாளர்களை மீண்டும் ஒருங்கிணைத்து உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அமைப்பினை மீண்டும் எழுப்புவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாத போக்கைத் தொடர்ந்து வளர்ந்து, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன. இது இறுதியில் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீது வலுவான சிதைந்த செல்வாக்கைக் கொண்டிருக்கும். விடுதலைப் புலிகளின் தோல்விக்கு இந்தியாவே காரணம் என வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் அனுதாபிகள் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். அதைத் தடுக்காவிட்டால் மத்திய அரசு மீதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீதும் தமிழ் மக்களிடையே வெறுப்பு உணர்வு உருவாக வாய்ப்புள்ளது’ என்று கூறி தடைக்கான காரணங்களாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்