Skip to main content

"அதிகாரிகள் ஏமாற்றிவிட்டனர்" - வீரப்பன் நக்கீரனுக்கு அனுப்பிய கடிதம்!

 

veerappan letter to nakkheeran

 

சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்து, பல வருடங்களாக தமிழக, கர்நாடக, கேரள அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கிய நபர் வீரப்பன். காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 184 பேரைக் கொன்றதாகவும், தந்தத்திற்காகச் சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளைக் கொன்றதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டு, இந்த மூன்று மாநில காவல்துறையும் வீரப்பனை தேடிவந்தன. 1987 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை அதிகாரியான சிதம்பரம் என்பவரைக் கடத்தியதாக வீரப்பன் மீது எழுந்த குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல்வேறு சர்ச்சைகள், வழக்குகள் என இந்தியா முழுவதும் பிரபலமாகியிருந்த வீரப்பனை நேரில் கண்டு முதன்முறையாகப் பேட்டியெடுத்தது நக்கீரன் குழு. அதனைத்தொடர்ந்து, வீரப்பன் குறித்த பல்வேறு செய்திகளையும் நக்கீரன் தொடர்ந்து வெளியிட்டதோடு, 2000 ஆவது ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளில் நக்கீரன் ஆசிரியர் முக்கிய பங்காற்றினார். இப்படி 90 -களின் மத்தியில் மூன்று தென் மாநிலங்களின் அரசியலில் தவிர்க்க முடியாத நபராக இருந்த வீரப்பன், நக்கீரனுக்கு எழுதிய கடிதம் 21.2.1990 நக்கீரன் இதழில் பிரசுரிக்கப்பட்டது. 

 

வீரப்பன் நக்கீரனுக்கு அனுப்பிய கடிதம்...

நக்கீரன் அலுவலகத்துக்கு எதிர்பாராத இடத்திலிருந்து கடிதம் ஓன்று வந்திருக்கிறது. -அதை எழுதியவர் சேலம் காட்டுப்பகுதிக்குள் தலைமறைவாக இருக்கும் 'சந்தனக்கடத்தல் மன்னன்'வீரப்பன்....!

 

அதிகாரிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் நகலை அதில் அனுப்பி வைத்திருக்கிறார். அதில், சரணடைய விரும்புகிறேன் என்று வீரப்பன் தெரிவித்திருக்கிறார்.

 

அவரை பிடிக்க போலீஸ் பட்டாளம் பகீரதப் பிரயத்தனம் செய்துவரும் இவ்வேளையில், இக்கடிதம் முக்கியத்துவம் குறைந்ததல்ல என்று நாம் கருதுவதால், அதை பிழைதிருத்தி கீழே பிரசுரித்திருக்கிறோம்.

 

கடிதத்தில் சில அரசு ஊழியர்கள் மீது வீரப்பன் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பதை கண்டறிய ஒரு முழு விசாரணை நடத்தவும், வீரப்பன் உண்மையிலேயே சரணடைய விரும்பினால்,அதற்குரிய ஏற்பாடுகளை செய்யவும், தமிழக அரசு உத்தரவிடுவது நல்லது.
                                                                             - ஆசிரியர். 

 

ஐப்பசி மாதம் 10 -ந் தேதி குளத்தூர் செக்- போஸ்ட்டில் இருக்கும் 'பாரெஸ்ட்' சுந்தரராஜனும்; 'கார்டு' கிருஷ்ணனும் என்னிடம் ஒரு ஆளை அனுப்பி ''ஐந்து ரைபிள்களை விலைக்கு கொடுக்கிறோம்; ரூ.75 ஆயிரம் கொடுத்து விடுங்கள்''என்று சொல்லி அனுப்பினார்கள். நானும் ரூ.75 ஆயிரம் கொடுத்து அனுப்பினேன். பத்து நாட்கள் கழித்து இரண்டு ரைபிள்களை மட்டும் அனுப்பி வைத்தார்கள். மீதி மூன்று ரைபிள்களையும் தரவேண்டும் என்று நான் கேட்டதற்கு அவர்கள் கொடுக்க மறுத்து விட்டார்கள். 

 

கார்த்திகை மாதம் 5-ந் தேதி குளத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் என்னிடம் ஒரு ஆளை அனுப்பி, தோட்டா விலைக்கு கொடுப்பதாக ஆசை காட்டினார்கள். இதற்காக,ரூ.37 ஆயிரம் என்னிடம் வாங்கி கொண்டார்கள்.15 நாட்கள் கழித்து துப்பாக்கி தோட்டாவும், ரைபிள் தோட்டாவும்கொண்டு வந்து கொடுத்தார்கள். இவற்றின் விலை ரூ.15 ஆயிரம்தான் இருக்கும். ஆனால்,ரூ.20 ஆயிரம் என்றார்கள்.சரி....அதுதான் போகட்டும்; மீதிப்பணம் ரூ.17 ஆயிரத்தை திருப்பி தாருங்கள் என்று நான் கேட்டதற்கு அதைக் கொடுக்க மறுத்து விட்டார்கள்.

 

கார்த்திகை 15-ந்தேதி ராஜேந்திரன் என்ற காட்டு இலாகா அதிகாரி என்னை சந்தித்து,''ஐந்து ரவுண்ட் ரைபிள் தருகிறேன்''என்றுசொல்லி ரூ.27 ஆயிரம் வாங்கி கொண்டு போனார். ரைபிளும் தரவில்லை.பணமும் தரவில்லை.கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை தேடி வருவதும் இல்லை. 

 

இப்படிப்பட்ட அதிகாரிகள் சிலர் பெரும் புள்ளிகளை வைத்து சாமி சிலைகளை திருடுவதும், தங்கக்கட்டிகளை கடத்துவதும், வெள்ளிக் கட்டிகளை கடத்துவதும், கள்ள நோட்டு அடிப்பதும், கொள்ளை அடிப்பதும், கொலை செய்வதும், கொலை செய்பவருக்கு துணை போவதும், யானைகளைக் கொன்று தந்தங்களை கழற்றி விற்பதும்,சந்தனமரங்களையும்,தேக்கு மரங்களையும்,மூங்கில்களையும் லோடுலோடாக கடத்தி விற்பதும், கள்ளச் சாராயம் காய்ச்ச சொல்வதும், ஒவ்வொருவரிடமும் மாதம் ரூ.1500 வீதம் தமிழ்நாடு முழுவதும் வாங்கி பணம் சேர்ப்பதும், முகமூடி கொள்ளை அடிப்பதும், கண்ணில் கண்ட பெண்களை கற்பழிப்பதும், இரவு நேரங்களில் கிராமங்களில் புகுந்து ஆண்களை எல்லாம் விரட்டி அடித்து விட்டு பெண்களை கற்பழிப்பதும்,பட்டிகளில் ஆடுகளை பிடித்துக்கொண்டு போய் அறுத்து திண்பதும்,அப்பாவி மக்கள் மீது பொய் வழக்கு போடுவதுமாய் அக்கிரமங்களை செய்து விட்டு,கடைசியில் எல்லாம் வீரப்பன்தான் செய்கிறான் என்று என்மீது பழிசுமத்தி விடுகிறார்கள்.

 

இப்படி என்மீது அபாண்டமாய் பழி சுமத்துவதை தயவு செய்து நிறுத்திவிடவும்!

 

நான் அரசு அதிகாரிகளை போலவோ, அவர்களின் கூட்டுக் கடத்தல் வியாபாரி கே.பி.நாச்சிமுத்து(முன்னாள் எம்.எல்.ஏ.)போலவோ வேறு ஆட்களை வைத்து அதிகாரிகளை சுட்டுக் கொன்று,கொள்ளையடித்து, கடத்தி சம்பாதித்து கொண்டிருக்கவில்லை. அப்படி நான் சம்பாதித்து இருந்தால் அவர்களுக்கு இருப்பது போல எனக்கும் நான்கு பஸ்கள், ஏழு லாரிகள், இரண்டு பேக்டரிகள், இரண்டு கார்கள், 5 குதிரைகள், ஒரு குதிரைவண்டி இருந்திருக்கும்.

 

முன்பு என் குடும்பத்தில் சில இன்னல்கள் ஏற்பட்டன. சிலர் என்னை கொல்ல நினைத்தார்கள். என் உயிரை காப்பாற்றிக் கொள்ள நான் சில தவறுகளை செய்து விட்டு, அதிகாரிகளுக்கு பயந்து காட்டுக்குள் தலைமறைவாகி விட்டேன். இதுதான் உண்மை. இதுவரை நான் அரசாங்கத்துக்கு விரோதமாகவோ, அரசியல்வாதிகளுக்கும், நாட்டுமக்களுக்கும், ஏழை எளிய விவசாயிகளுக்கும் விரோதமாகவோ, சமூக விரோதியாகவோ நடந்து கொள்ளவில்லை.

 

கொலை, கொள்ளை, கடத்தல், கள்ளத்தனம் செய்யும் அரசியல்வாதிகள் நாட்டில் நலமாக இருக்கிறார்கள்; நாம் ஏன் காட்டில் மறைந்திருக்க வேண்டும்? நாமே நேரில் சென்று கோர்ட்டில் சரணடைந்து, இவ்வளவு நாளும் நடந்த உண்மைகளை வெளியிட வேண்டும்; என் பெயரை சொல்லி கடத்திய கடத்தல்காரர்களையும், அதிகாரிகளை சுட்டுக் கொன்ற கொலைகாரர்களையும் நானேபிடித்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

 

ஆனால்,காவல்துறையினரும், காட்டு இலாகாவினரும் என்னை துப்பாக்கியால் சுட்டுவிட்டார்கள். எனக்கு பலத்த அடிபட்டுவிட்டது. மேட்டூர் ஆஸ்பத்திரியில் ஒன்பது நாட்கள் சிகிச்சை பெற்றேன். பலன் அளிக்கவில்லை.

 

இப்போது சேலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன்.நீங்கள் என்னை தேடி கண்டுபிடிப்பது கஷ்டம். உடல் நலமாகிவிட்டால் நேரில் வருகிறேன்.
                                                                     

                                                                       இப்படிக்கு,
                                           காவல் துறையினராலும்,
                                        காட்டு இலாகாவினராலும் 
                                                   ''காட்டு ராஜா'' என்று 
                                                            அழைக்கப்படும் 
                                                                           வீரப்பன்.